அனைத்து ஆசிரியர்களுக்கும் இச்சட்டசபை கூட்டத் தொடரிலேயே (09.10.2023) பணிப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றிட ஆசிரியர் கழகம் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 29, 2023

அனைத்து ஆசிரியர்களுக்கும் இச்சட்டசபை கூட்டத் தொடரிலேயே (09.10.2023) பணிப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றிட ஆசிரியர் கழகம் கோரிக்கை



அனைத்து ஆசிரியர்களுக்கும் இச்சட்டசபை கூட்டத் தொடரிலேயே (09.10.2023) பணிப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றிட ஆசிரியர் கழகம் கோரிக்கை

நாள் : 29.09.2023

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

பெறுநர்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்கள்

உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! பொருள்

அவசரத் தேவையை கருத்தில் கொண்டு - பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இச்சட்டசபை கூட்டத் தொடரிலேயே (09.10.2023 அன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டத் தொடர்) பணிப் பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றிட- ஆவன செய்ய வேண்டுதல் சார்பாக.

பள்ளிகளில் தவறிழைக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களை நெறிமுறைப் படுத்துவதற்காக, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் பெருமக்கள் எடுக்கும் சிறுசிறு நடவடிக்கைகளைக்கூட ஏற்காமல், அம்மாணவர்கள் மற்றும் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் உறவினர்கள் என்ற போர்வையில் வாலிபர்கள், ரௌடிகள், அப்பகுதியில் இருக்கும் தாதாக்கள், தீயசக்திகள் மற்றும் அப்பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பள்ளிக்குள் புகுந்து, ஆசிரியர்களை மிரட்டுவதும், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவதும், ஆசிரியர்களை அடித்து நொறுக்குவதும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமாகவே இருக்கிறது. போதாக் குறைக்கு பள்ளிக்கல்வித்துறையும், எரியும் நெருப்பில் நெய் வார்க்கும் செயலில்தான் ஈடுபட்டு வருகிறது. வீட்டில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டாலும் - அதற்காக, ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யும் கல்வித்துறை பள்ளி கழிவறையில் சாராய பாட்டில் கிடந்தால் அதற்கும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை. கல்வித்துறையின் இத்தகைய செயல்கள் அறிவிபூர்வமாக இல்லை. அப்பாவி ஆசிரியர்கள் மீது பழி சுமத்தி - உண்மை குற்றவாளிகளை - தப்பிக்க விடும் முயற்சிகளைத்தான் பள்ளிக்கல்வித்துறை அன்றாடம் அரங்கேற்றி வருகிறது.

பிடிக்காத ஆசிரிகளை பழிவாங்குவதற்காகவே பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒரு ஆயுதமாக தற்போது பல பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே ஆசிரியர்கள் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்குமோ என்ற பயத்துடனும், அச்சத்துடனும், மன அமைதி இழந்து, மன உலைச்சலுடன்தான், கல்விப் பணியாற்றி வருகின்றனர். இனியும் இக்கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற மனநிலைக்கு ஆசிரியர் சமுதாயம் வந்துள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஆகவே அடுத்த மாதம் 9.10.2023 தொடங்க இருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே, மேற்கூறிய தாக்குதல்களிலிருந்தும், அநீதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்திட தேவையான ஆசிரியர் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்து அதை நிறைவேற்றி சட்டமாக்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வித்துறை விரைந்து மேற்கொள்ள வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.