பிளஸ் 2 பொது தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 2, 2025

பிளஸ் 2 பொது தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்



Plus 2 public exams begin tomorrow: 8.21 lakh students are writing - பிளஸ் 2 பொது தேர்வு நாளை தொடக்கம்: 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகி்ன்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளான நாளை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டார கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, தடையற்ற மின்சாரம், போதிய காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்சாதனங்களை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் முறையாக பின்பற்றி நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது. விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் ஆகியவற்றை குறிப்பிட கூடாது. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.