உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி வழங்குதல் - SCERT இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 5, 2024

உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி வழங்குதல் - SCERT இயக்குநர் செயல்முறைகள்



உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி வழங்குதல் - SCERT இயக்குநர் செயல்முறைகள் - Providing Safety and Maintenance Training to High / High School Laboratory Assistants - SCERT Director Procedures மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06 ந.க.எண்.523/ஊ4/2023நாள் 4.03.2024.

பொருள்:

சென்னை-06 - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் - ஆய்வக உபகரணங்களை கையாளுதல் - பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு - பயிற்சி வழங்குதல் - சார்ந்து

பார்வை:

சென்னை-09, பள்ளிக்கல்வித் துறை, அரசு செயலாளரின் கடிதம் எண்.773/ப.க.4(1)/2024 நாள்.31.01.2024.

பார்வை1-ல் காணும் பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் கடிதத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பல்வேறு ஆய்வகங்கள் குறித்தும் இவற்றை பராமரிக்கும் ஆய்வக உதவியாளர்கள் பணிகள் குறித்தும் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவ/ மாணவியர்கள் பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பள்ளிகளில் செயல்படும் அடல்டிங்கரிங் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் / மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல் ஆய்வகங்கள், மொழி ஆய்வகங்கள், தொழிற்கல்வி ஆய்வகங்கள், கணித ஆய்வகங்கள் போன்ற பல்வேறு ஆய்வகங்களை ஆய்வக உதவியாளர்கள் திறம்பட பராமரிக்க வேண்டும் என்றும், ஆய்வகப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆய்வக உதவியாளர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அனைத்து வகை ஆய்வகங்களையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திடும் வகையில் தொடர்புடைய பாட ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாணவர்களின் ஆய்வக செயல்பாடுகளுக்குத் தேவையான உரிய முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ஆய்வக உதவியாளர்கள் இப்பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் பொருட்டு, ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வகப் பணிகள் குறித்து தேவையான பயிற்சியினை வழங்கிடுமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு அரசு செயலாளர் அறிவுறுத்தியுள்ளதின் அடிப்படையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு அனைத்து ஆய்வக செயல்பாடுகள் குறித்தான மாநில அளவிலான பயிற்சியினை சென்னை-06, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள SIEMAT கருத்தரங்கில் 11.03.2024 முதல் 16.03.2024 முடிய வழங்கப்படவுள்ளது.

மேற்படி பொருள் சார்ந்து, மாநில அளவில் பயிற்சியினை அளிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் முதுநிலை விரிவுரையாளர்கள் விரிவுரையாளர்கள்/ வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள்/முதுகலை ஆசிரியர்கள் பாடத்திற்கு ஒவ்வொரு (Physics, Chemistry, Botany & Zoology) ஒருவர் என்று மாவட்டத்திற்கும் 4 நபர்கள் வீதம் இணைப்பு-1 இல் குறிப்பிட்டுள்ளவாறு) பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஆய்வக உதவியாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப 18.03.2024 முதல் 10.05.2024 முடிய இணைப்பு 2 இல் உள்ள சுற்றுகளின் அடிப்படையில் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஒருங்கிணைந்து எந்தெந்த தேதிகளில் பயிற்சி நடத்திட வேண்டும் என கலந்தாலோசித்து 07.03.2024 -க்குள் இயக்குநருக்கு நகல் ஒன்றினை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மாவட்ட அளவிலான பயிற்சியினை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மட்டுமே நடத்திடுமாறு சார்ந்த முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், மேற்குறிப்பிட்டுள்ள ஆய்வக உதவியாளர்களுக்கான பணியிடைப் பயிற்சியில் கீழ்க்காணும் விவரங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இணைந்து உறுதி செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வக உதவியாளர்களின் வருகைப் பதிவு குறைந்தபட்சம் 90% (Working Days) இருத்தல் வேண்டும்.

வருகைப் பதிவானது விரல் ரேகையில் (Bio Matrix) பதிவிட வேண்டும்.

பயிற்சி முடியும் தருவாயில் கட்டாய பணியிடைப் பயிற்சி சார்ந்த தேர்வு நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.

அவ்வாறு தேர்ச்சி பெற்ற ஆய்வக உதவியாளர்களின் சான்றிதழை உரிய பணிப் பதிவேட்டில் (SERVICE REGISTER) பதிவு செய்ய வேண்டும்.

பணியிடைப் பயிற்சியில் குறைந்தபட்ச வருகை பதிவு இல்லாதவர்களுக்கும், பயிற்சி சார்ந்த தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கும் சான்றிதழ் சான்றிதழ் கண்டிப்பாக வழங்கப்படக் கூடாது.

எனவே, ஆய்வக உதவியாளர் பயிற்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை பணிவிடுவிப்பு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் பயிற்சியில் பங்கு பெறவும், ஆய்வக உபகரணங்களை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரிடம் வழங்கி பயிற்சி நல்ல முறையில் நடைபெற உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி மாநில அளவிலான பயிற்சி பணிமனையினை இந்நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் திரு. பிரபாகர், முதுநிலை விரிவுரையாளர்,(86100 41250) மற்றும் திருமதி. ந. ரூபி, விரிவுரையாளர் (99440 51244) ஆகியோர் பொறுப்பேற்று நடத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு :

1. பயிற்சி கால அட்டவணை

2. மாவட்ட வாரியாக ஆய்வக உதவியாளர்களின் எண்ணிக்கை

பெறுநர்

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

2. முதல்வர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். CLICK HERE TO DOWNLOAD - SCERT இயக்குநர் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.