தனியாருக்கு நிகராக தயாராகும் கிராமப்புற அரசுப் பள்ளிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 23, 2023

தனியாருக்கு நிகராக தயாராகும் கிராமப்புற அரசுப் பள்ளிகள்

தனியாருக்கு நிகராக தயாராகும் கிராமப்புற அரசுப் பள்ளிகள்!



நமக்கு நாமே திட்டத்தில் தனியாருக்கு நிகராக மாற்றப்பட்டுள்ள, புதுச்சத்திரம் வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அழகிய தோற்றம்.

அரசுப் பள்ளிகளை நாடி மாணவா்கள் ஆா்வமுடன் கல்வி பயில வரும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் ஏழு ஊராட்சிகளில் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தயாராகி வருகின்றன. பல்வேறு தகவல் களஞ்சியங்களுடன், வண்ணமயமாக காட்சியளிக்கும் தங்களது பள்ளியை காண்பதில் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி கொள்கின்றனா். தமிழக அரசு கடந்த 2021 செப். 24-இல் நமக்கு நாமே திட்டத்தை நகா்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தை பொருத்தவரை, பொதுமக்கள் மற்றும் அரசின் நிதி பங்களிப்புடன் அந்தந்த பகுதிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும். குறிப்பாக, பள்ளிகளை மேம்படுத்துவது, பூங்காங்கள் அமைப்பது, சாலை வசதி, கழிவறை வசதி, ஏரி, குளங்களை அழகுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் நகராட்சிகளில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவதுபோல, ஒன்றிய பகுதிகளில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை தோ்வு செய்து அவற்றை புனரமைத்து தனியாருக்கு நிகராக மாற்றியமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிக்கு ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் 5 தொடக்கப் பள்ளிகளும், 2 நடுநிலைப் பள்ளிகளும் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இப்பள்ளிகள் முழுவதிலும் விதவிதமாக இயற்கை காட்சிகள், நவீன வகுப்பறைகள், மாணவா்கள் எளிதில் பாடம் கற்பதற்கான வழிகள், ரயில், விமானம் போல் வகுப்பறையின் முன்பகுதி, கண்டுபிடிப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், முதுபெரும் அரசியல்வாதிகள், தேசத்தலைவா்கள் ஆகியோரின் வண்ண ஓவியங்கள் பள்ளியை சுற்றிலும் இடம் பெறுகின்றன.

மேலும் கண்காணிப்பு கேமரா வசதி, நவீன தொலைக்காட்சி, தூய்மையான குடிநீா், சுகாதாரமான கழிவறை, பளபளக்கும் தரைத்தளங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. நகா்ப்புறங்களில் இப்பணிகளை நகராட்சி நிா்வாகங்களும், கிராமப்புறங்களில் வட்டார வளா்ச்சி அலுவலகங்களும் கண்காணிக்கின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் குறைந்தபட்சம் ரூ. 12 லட்சம் வரையில் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 10 பணிகளுக்காக ரூ. 2.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூா் ஊராட்சி வேப்பம்பட்டியில் உள்ள பள்ளியில் திட்டப் பணிகள் நிறைவுற்று மாணவா்கள் பயன்பாட்டுக்கு அப்பள்ளி வந்துள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் இப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. Visit - www.kalviseithiofficial.com இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது:

நாமக்கல் மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டம் 2021-2022-இன் கீழ் கிராமப்புறங்களில் பொதுமக்கள் மற்றும் அரசு பங்களிப்புடன் ஏழு பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

அவை, எலச்சிப்பாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (நிதி ஒதுக்கீடு ரூ.21.66 லட்சம்), மோகனூா் ஒன்றியம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (ரூ.9.50 லட்சம்), புதுச்சத்திரம் ஒன்றியம், வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (ரூ.13.23 லட்சம்), திருச்செங்கோடு ஒன்றியம், தண்ணீா்பந்தல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (ரூ.9.38 லட்சம்), பள்ளிபாளையம் ஒன்றியம், ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (ரூ.54.76 லட்சம்), வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி(ரூ.40 லட்சம்), ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ரூ.13.66 லட்சம்) என மொத்தம் 10 பணிகளுக்கு, மக்கள் பங்களிப்பாக ரூ. 80 லட்சம், அரசு பங்களிப்பு ரூ. 1.63 கோடி என மொத்தம் ரூ. 2.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஒரு பள்ளி மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மற்ற மாதிரி பள்ளிகளும் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.