ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்கலை கழகங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு புதிய அதிரடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்கலை கழகங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு புதிய அதிரடி



ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்கலை கழகங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு புதிய அதிரடி

தமிழகத்தில், பல்கலைக் கழகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டில் 4,000 உதவி பேராசிரியர்கள் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களுக்கு எழுத்து தேர்வை நடத்த உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தரத்தை மேம்படுத்த வழிமுறைகளை வகுக்க அரசு குழு அமைத்தது. ஆசிரியர் உள்பட பணி நியமனங்களை விரைவுப்படுத்தவும், முறைகேடுகள் எதுவும் இன்றி தேர்வுகளை நடத்தவும் அந்த குழு 39 பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்தது. அந்தப் பரிந்துரைகளை சிறிய மாற்றங்களுடன் அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) விதிப்படி, ஆசிரியர் தேர்வு வாரியமும் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்து இருக்கிறது. அந்தவகையில், தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாக பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமை பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் பிரிவு, ரகசியப்பிரிவு, தேர்வு நடத்துதல் பிரிவு, சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவு, நூலகப் பிரிவு ஆகிய 11 பிரிவுகள் திறமையானதாகவும், பயனுள்ளதாகவும் ஏற்படுத்தப்பட்டு மறு சீரமைக்கப்படுகின்றன.

இதன் செயல்பாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் டி.என்.பி.எஸ்.சி.யில் இருப்பது போல தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். இதுதவிர, மாவட்ட வருவாய் அதிகாரி, துணை கலெக்டர், இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர் உள்பட 71 பதவியிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கை விஷயங்களை தீர்மானிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைவராகவும், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இதில் 4 முன்னாள் அதிகாரிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட இருக்கின்றனர். அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடுநிலை, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வார்கள். தகுதியானவர்களை தேர்வு செய்வதை வேகப்படுத்த சுருக்க பட்டியல் விகிதம் 1:1.25 என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின்(பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள் உள்பட) பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரப்பப்படும். இதற்கு முன்பு பல்கலைக்கழகங்கள் பணியிடங்கள், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், அது இப்போது புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டங்களை ஐ.ஐ.டி., புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணர்களால் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல் குழு பரிந்துரைத்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.