மனஉளைச்சல் ஏற்பட்டதால் நீட் தேர்வு பயிற்சியை சமாளிக்க முடியாமல் மாணவன் தற்கொலை: ஆவடியில் அதிர்ச்சி சம்பவம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

மனஉளைச்சல் ஏற்பட்டதால் நீட் தேர்வு பயிற்சியை சமாளிக்க முடியாமல் மாணவன் தற்கொலை: ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்



மனஉளைச்சல் ஏற்பட்டதால் நீட் தேர்வு பயிற்சியை சமாளிக்க முடியாமல் மாணவன் தற்கொலை: ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்

நீட்தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது, ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி, கோவர்த்தனகிரி, செல்வன் நகரை சேர்ந்தவர் விஜயன் (47). இவர், ஸ்ரீ பெரும்புதூரில் பிரபல கார் தயாரிப்பு நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது ஒரே மகன் பாலாஜி (17), பருத்திப்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பாலாஜியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். எனவே பாலாஜியை நீட் தேர்வுக்கு கவனமாக படித்து வெற்றி பெறவேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். இதனால் பாலாஜி கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மகன் பாலாஜியை நீட் தேர்வுக்கு படிக்கும்படி கூறிவிட்டு, பெற்றோர் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க கடைக்கு சென்றுள்ளனர். வீட்டில் தனியே இருந்த பாலாஜி, நீட் தேர்வு பயம் குறித்து ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து வீடு திரும்பிய பெற்றோர், படுக்கையறையில் மகன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலாஜியை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து ஆவடி போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், மாணவன் பாலாஜி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.