குடற்புழு நீக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 19, 2022

குடற்புழு நீக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

குடற்புழு நீக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 29 மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை சுகாதாரத்துறை சார்பில் செவிலியர் பள்ளிக்கு நேரில் வந்து அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி சாப்பிடும்படி கூறியுள்ளார். இந்நிலையில், மாத்திரை சாப்பிட்ட 5ம் வகுப்பு மாணவிகள் தீபிகா, காவியா, யோகலட்சுமி, 4ம் வகுப்பு மாணவி செஞ்சியம்மா, 3ம் வகுப்பு மாணவிகள் உமா மகேஸ்வரி, சஞ்சனா, குண, மாணவன் ஹரிகிருஷ்ணன், 2ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி, முதல் வகுப்பு மாணவன் நரசிம்மன் ஆகிய 10 மாணவர்களுக்கு மதியம் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை பாரதி மற்றும் சக ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிக்க | Budget Speech for the year 2022-2023 - English - PDF

மேலும், மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சஞ்சனா மற்றும் குண ஆகிய 2 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததால் எவ்வித பயமும் இல்லை என திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரகலநாதன் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.