போலீசையே குத்துவேன்..”ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு” பள்ளியில் மிரட்டிய மாணவன்.. பதறிய ஆசிரியர்கள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 19, 2022

போலீசையே குத்துவேன்..”ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு” பள்ளியில் மிரட்டிய மாணவன்.. பதறிய ஆசிரியர்கள்.

போலீசையே குத்துவேன்..”ஏறுனா ரயிலு இறங்குனா ஜெயிலு” பள்ளியில் மிரட்டிய மாணவன்.. பதறிய ஆசிரியர்கள்..!

தேனி : போலீசை கத்தியால் குத்துவேன், நான் ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில், போட்டா பெயில் என்று மிரட்டி பேசும் மாணவர்களுக்கு பயந்து தேனி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு இல்லை என மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளதோடு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ படிக்கும் மாணவன், ஆசிரியர் ஏன் பாடப்புத்தகத்தை எடுத்து வரவில்லை என்று மாணவனிடம் கேட்டதற்கு, மாணவன் ஆசிரியர் கன்னத்தில் அடித்துள்ளான்.

இந்த சம்பவமும் தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களை மிரட்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களை மாணவன் மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. *தேவதானபட்டியில் அதிர்ச்சி*

தேவதானபட்டியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவனின் ஒழுக்கமின்மையை அவரது பெற்றோரிடம் கூறியதாகவும், இதனை அறிந்த அந்த மாணவன் வகுப்பறைக்கு கையில் கத்தியோடு வந்துள்ளான். மேலும் சம்மந்தபட்ட ஆசிரியையை குத்த முயற்சி செய்தபோது, சக ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியையின் வாகனத்தை கத்தியினால் குத்தி சேதபடுத்தி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனை ஆசிரியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, சினிமா பட பாணியில் 'நான் போலீசையே குத்துவேன், ஏறினால் ரயிலு, இறங்கினால் ஜெயிலு, போட்டா பெயிலு' என பஞ்ச் பேசியுள்ளான் அந்த மாணவன்.

*வகுப்பிற்குள் கத்தி*

மீண்டும் மறுநாள் வந்து அந்த ஆசிரியையை கத்தியால் குத்த முயல, மிரண்டு போன ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.மேலும், மீண்டும் நாளை பள்ளிக்கு சென்றால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என வேதனையுடன் கண்ணீர் விட்டு புலம்பியுள்ளார் அந்த ஆசிரியை. இதேபோன்று பெரியகுளம் அருகே உள்ள ஜி கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி கிண்டல் செய்யும் நிகழ்வும் நடந்து வந்துள்ளதாக அப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். *ஆசிரியைக்கு கொலை மிரட்டல்*

தொடர்ந்து நேற்று காலை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தை கண்டித்தும், கல்லுப்பட்டி கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவத்தை கண்டித்தும் ஆசிரியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கிட கோரி பெருந்திரள் ஆசிரியர்கள் சார்பில் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

*பெரும் அதிர்ச்சி*

முன்பெல்லாம் பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர்களுக்கு பயந்து மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த காலம் போய், மாணவர்களுக்கு பயந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் நிலை அரசு பள்ளிகளில் உருவாகி உள்ளது இன்றைய சூழ்நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.