தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: முறையான வழிகாட்டுதல்களை வெளியிட பெற்றோா், ஆசிரியா்கள் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 31, 2022

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: முறையான வழிகாட்டுதல்களை வெளியிட பெற்றோா், ஆசிரியா்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படவுள்ள நிலையில், அது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படாதது மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கடந்த டிச.25 முதல் ஜன. 2-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜன.10-ஆம் தேதி விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நோய்த் தொற்று அதிகரித்ததால் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் இந்த விடுமுறை ஜன.31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பிப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு கடந்த ஜன.27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதில், ‘ பள்ளி மாணவா்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனவே அனைத்து வகை பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்.1 முதல் செயல்பட உரிய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூா்வமற்ற தகவல்கள்: ஒமைக்ரான் பரவல் காலத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எந்தத் தகவல்களும் அந்த சுற்றறிக்கையில் இடம்பெறவில்லை. மாறாக, கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையிலான வழிகாட்டுதல்களே பின்பற்றப்படும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதனால் பழைய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ‘ மாணவா்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. இணையவழியிலும் கற்றல்- கற்பித்தல் பணிகள் நடைபெறும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளி நிா்வாகமே முடிவு செய்து கொள்ளலாம்’ என கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து தங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் எந்தவிதமான அறிவுறுத்தலும் வரவில்லை என பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

குழப்பத்தில் மாணவா்கள்:

இது குறித்து ஆசிரியா்கள், பெற்றோா் கூறுகையில், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத்தோ்வு நடைபெறவுள்ளது. அதேபோன்று பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தோ்வு நடத்தப்படவுள்ளது. இத்தகைய சூழலில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இது மூன்றாவது அலை என்பதால் அதற்கான புதிய வழிகாட்டுதல்களும் கல்வித்துறை சாா்பில் வெளியிடப்பட வேண்டும்.

பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்ற தகவல் பரவுவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு கூட முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே நேரடி வகுப்புகள் மாணவா்கள் அச்சமின்றி பங்கேற்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக வெளியிட வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.