'மீண்டும் ஒரு தேர்வு எதற்கு?' - தமிழக அரசிடம் நீதி கேட்கும் 34,200 பட்டதாரி ஆசிரியர்கள்
ஏற்கனவே பல தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று 34,200 பேர் பணிக்குக் காத்திருக்கும் நிலையில், மார்ச் மாதம் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு நடத்தப்படுவதை பட்டதாரி ஆசிரியர்கள் வன்மையாக எதிர்க்கின்றனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்களுக்கு மறு நியமனத் தேர்வு இல்லாமல் நேரடியாகப் பணி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கலைவாணி, எம்.மோகன்ராஜ் மற்றும் எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு: 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் (BT) மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் (BRTE) நியமனத் தேர்வில் மொத்தம் 37,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அறிவிக்கப்பட்ட 3,192 காலிப்பணியிடங்களில், 2,800 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 392 இடங்களுக்கான இரண்டாவது பட்டியலை அரசு வெளியிடவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக 726 ஆசிரியர் பயிற்றுநர் (BRTE) பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மார்ச் மாதம் 1,205 பணியிடங்களுக்காக மீண்டும் ஒரு நியமனத் தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள், "ஏற்கனவே தகுதித் தேர்வு (TET), தமிழ் தகுதித் தேர்வு மற்றும் 2023 நியமனத் தேர்வு என அனைத்திலும் தேர்ச்சி பெற்று 34,200 பேர் காத்திருக்கிறோம். அப்படியிருக்கையில் மீண்டும் எதற்காகத் தேர்வு நடத்த வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
தேர்வு எழுதி எழுதியே எங்கள் தலைமுறையே முடிந்துவிட்டது; விடியல் அரசு என்று கூறும் முதல்வர் ஸ்டாலின் தான், எங்கள் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்தபோது, இக்கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே, ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு காலியாக உள்ள 1,025 மற்றும் 726 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.