தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 5, 2024

தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்



தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

2024- ம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஆசிரியராக தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்நன்னாளில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு "தேசிய ஆசிரியர் விருது" மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. 2024-ம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருதிற்கு 38 மாவட்டங்களைச் சார்ந்த 102 ஆசிரியர்கள் இணைய வழியில் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் பொம்மைகளை பயன்படுத்தி கற்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வேலூர் மாவட்டம், ராஜகுப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரா.கோபிநாத் மற்றும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குதல் மற்றும் தொழிற்கல்வி கற்பித்தலில் கணினி தொழில்நுட்பம் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக மதுரை, லட்சுமிபுரம், டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் (அடிப்படை தானியங்கி ஊர்திப் பொறியியல் - Basic Auto Mobile Engineering) மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 ரா.சே.முரளிதரன் ஆகிய இரண்டு ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டு, இந்திய ஜனாதிபதியால் கடந்த செப்டம்பர் 5-ஆம் நாளன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "தேசிய நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டது. "தேசிய நல்லாசிரியர் விருது" பெற்ற ஆசிரியர்கள் ரா.கோபிநாத் மற்றும் ரா.சே.முரளிதரன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (4.10.2024) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் எஸ்.மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.