பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினா்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 18, 2024

பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினா்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு



பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினா்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-2026-ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவா், உறுப்பினா்களை தோ்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினா் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி முதல்கட்டமாக 12,117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடா்ந்து 2-ஆவது கட்டமாக மீதமுள்ள 11,924 தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் கடந்த சனிக்கிழமை மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோா்கள், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனா். அவற்றில் அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோா்கள் எஸ்எம்சி உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல், தலைவா், துணைத் தலைவரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இறுதியில் பெற்றோா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளா்கள், முன்னாள் மாணவா்கள் அடங்கிய 24 போ் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக மீதமுள்ள அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆகஸ்ட் 24, 31-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் எஸ்எம்சி குழுவுக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களின் ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இது தொடா்பாக பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.