Ordinance - 243 Issue: Conflict within Teachers Unions - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 6, 2024

Ordinance - 243 Issue: Conflict within Teachers Unions



அரசாணை - 243 விவகாரம்: ஆசிரியர் சங்கங்களுக்குள் மோதல்

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு விதிகளை மாற்றிய, 243ம் எண் அரசாணைக்கு, சங்கங்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் உருவாகிஉள்ளதால், மோதல் வெடித்துள்ளது.

அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப் பட்டு வந்தது.

கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த நடைமுறையால், ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டதாக, சில சங்கங்கள் புகார் கூறின; வழக்கு களும் தொடரப்பட்டன. இந்நிலையில், 'தொடக்க பள்ளிகளில், பட்டதாரி மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இனி மாநில முன்னுரிமை பட்டியல்படியே மேற்கொள்ளப்படும்.

'அதில், தகுதியானவர்கள் இல்லாவிட்டால், நேரடி நியமனம் மேற்கொள்ளப்படும்' என, கடந்த ஆண்டு டிச., 21ல், 243ம் எண்ணிட்ட அரசாணையை அரசு பிறப்பித்தது.

இதற்கு, தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. குறிப்பாக, 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து, 'டிட்டோ ஜாக்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன.

இந்த கூட்டமைப்பு, 'புதிய அரசாணையால், 20 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவிகள் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது' என்று குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், அரசாணை ரத்து கோரி போராட்டம் அறிவித்துள்ளது. அதேநேரம், தொடக்க கல்வியில், 20 ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் சங்கங்கள், அரசின் புதிய அரசாணைக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வர் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.



சில சங்கங்கள், '243ம் எண் அரசாணை இருக்கட்டும்; அதில், சில திருத்தங்கள் செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளன.

ஒரு அரசாணையால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், இந்த பிரச்னைகளை எப்படி தீர்ப்பது; ஆசிரியர் சங்கங்களை எப்படி சமாளிப்பது என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.