அரசுப்பள்ளிகளில் இந்தப் பணிகளுக்கு தமிழ் தெரிந்தவர்களையே நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 25, 2023

அரசுப்பள்ளிகளில் இந்தப் பணிகளுக்கு தமிழ் தெரிந்தவர்களையே நியமிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு



அரசு பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறைக்கான டெண்டரை தனியாருக்கு வழங்கும்போது, பாதுகாப்பு, தூய்மைப் பணியாளர் பணிக்கு தமிழ் தெரிந்தவரையே நியமிக்க வேண்டும்.

- தமிழ்நாடு அரசின் டெண்டர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மைப் பணிகளுக்கு தனியாரை நியமிக்கும்போது, தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என டெண்டர் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும்; கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்; 5 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதனால் டெண்டரை எதிர்த்து குவாலிட்டி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் டெண்டர் நிபந்தனைகளில் தலையிட முடியாது என அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 'தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும்; ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும்; 3 ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், டெண்டர் நிபந்தனைகள், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை எதிர்க்க முடியாது எனவும் தெரிவித்த தமிழக அரசு, தற்போது அதை திருத்தியது ஏன் என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி, டெண்டர் நிபந்தனைகளை ரத்து செய்து, புதிய டெண்டர் கோர உத்தரவிட்டனர்.

மேலும் கிராமப்புற மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு ஏதுவாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணியாளர் பணிக்கும் தமிழ் தெரிந்தவரையே கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பரிசீலிக்க டெண்டர் குழுவுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.