புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களை தேசிய திட்டத்தில் சேர்க்காததால் தமிழக அரசுக்கு ரூ .670 கோடி வட்டி சுமை - இந்திய தணிக்கை துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 22, 2023

புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களை தேசிய திட்டத்தில் சேர்க்காததால் தமிழக அரசுக்கு ரூ .670 கோடி வட்டி சுமை - இந்திய தணிக்கை துறை

புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களை தேசிய திட்டத்தில் சேர்க்காததால் தமிழக அரசுக்கு ரூ .670 கோடி வட்டி சுமை - இந்திய தணிக்கை துறை

புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்களை தேசிய திட்டத்தில் சேர்க்காததால் தமிழக அரசுக்கு ரூ .670 கோடி வட்டி சுமை இந்திய தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் குற்றச்சாட்டு

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளஅரசு ஊழியர்களை, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்காததால் கடந்த நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.670.36 கோடி வட்டிச்சுமை ஏற்பட்டதாக இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022 மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் மாநில அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு (உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும்கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் உள்பட) பங்களிப்புடன் கூடியஓய்வூதியத் திட்டம் (புதிய ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, பணியாளர்கள் தங்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீத தொகையையும், மாநில அரசு இதற்கு சமமான தொகையும் செலுத்துவர். தமிழக அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராமலும், நிதி மேலாளர்களை நியமிக்காமலும், சிபிஎஸ் பங்களிப்புத் தொகையை தொடர்ந்து எல்ஐசி மற்றும் கருவூலப் பத்திரங்களில் முதலீடு செய்து வந்தது.

இந்த தொகைக்கு எல்ஐசி-யிடமிருந்து 5.47 சதவீத வட்டியும், கருவூலப் பத்திரங்களில் இருந்து 4.29 சதவீத வட்டியும் வழங்கியது. இந்த காலகட்டத்தில் (2021-22) பொது வருங்கால வைப்புநிதிக்கு உரிய (ஜிபிஎஃப்) வட்டியான 7.1 சதவீதத்தை சிபிஎஸ் சந்தாதாரர்களுக்கும் அரசு செலுத்தியது. எல்ஐசி மற்றும் கருவூலகப் பத்திரங்களில் பெறப்படும் வட்டி குறைவாக இருப்பதால், இந்த வேறுபாட்டு தொகையை அரசே ஏற்கிறது.

2021-2022-ம் நிதியாண்டில் வேறுபாட்டுத் தொகையாக அரசு ரூ.670.36 கோடி செலுத்தியது. இதுமுற்றிலும் தவிர்த்திருக்கக் கூடியது.அத்துடன், மாநில வருவாய் ஆதாரங்களில் சுமையை ஏற்படுத்தும்.

மாநில அரசு ஊழியர்களை தேசிய சேமிப்புத் திட்டத்தில் சேர்த்து, நிதி மேலாளரை நியமித்திருந்தால் சந்தாதாரர்கள் தற்போது அரசு வழங்கும் ஜிபிஎஃப் வட்டியான 7.1 சதவீதத்தைவிட கூடுதல் வட்டியைப் பெற்றிருப்பர்.

புதிய ஓய்வூதியத் திட்டம்தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளாகியும், மாநில அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரவில்லை. 2022மார்ச் வரை சிபிஎஸ் நிதியில் சேர்ந்திருந்த ரூ.53,462.99 கோடியில், ரூ.36,510 கோடியை எல்ஐசி-யில்புதிய குழு ஓய்வூதியத் திட்டம் என்பதன் கீழ் முதலீடு செய்யப்பட்டது. சந்தாதாரர்களுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வட்டியால், மாநில வருவாய் வகை செலவினத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக அரசின் கூடுதல்தலைமைச் செயலாளர் விளக்கம்அளிக்கையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தனது அறிக்கையை 27.11.2018 அன்று வழங்கியதாகவும், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் (பிஎப்ஆர்டிஏ) கீழ் நிதி மேலாளர் மூலமாக நிதியை முதலீடு செய்வது தொடர்பாக அரசு எவ்வித கொள்கை முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.