காலை உணவுத் திட்டத்தால் 1,319 பள்ளிகளில் மாணவா்கள் வருகை அதிகரிப்பு: முதல்வா் பெருமிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 15, 2023

காலை உணவுத் திட்டத்தால் 1,319 பள்ளிகளில் மாணவா்கள் வருகை அதிகரிப்பு: முதல்வா் பெருமிதம்

காலை உணவுத் திட்டத்தால் 1,319 பள்ளிகளில் மாணவா்கள் வருகை அதிகரிப்பு: முதல்வா் பெருமிதம்

காலை உணவுத் திட்டத்தால், தமிழகத்தில் 1,319 பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கையின் மூலம் இதுகுறித்த விவரம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 1,543 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாகத் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனா். இந்தத் திட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, மாநில திட்டக்குழு சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கிடைத்த தகவல்கள் அடங்கிய அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலை உணவுத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாகத் தொடங்கப்பட்டதில் 1.14 லட்சம் மாணவா்களும், இரண்டாவது கட்டத்தில் 56 ஆயிரம் மாணவா்களும் பயன் பெற்று வருகின்றனா். ஒவ்வொரு மாணவருக்கும் காலை உணவுக்காக தினமும் ரூ.12.71 செலவிடப்பட்டு வருகிறது.

காலை உணவுத் திட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் 77 சதவீத பள்ளிகளில் வருகைப் பதிவில் நோ்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதைப் பாா்க்க முடிகிறது. அதாவது, 1,086 பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் அளவானது 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. 22 பள்ளிகளில் 40 சதவீதம் வரை மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூா், பெரம்பலூா், அரியலூா், திருவாரூா் மாவட்டங்களில் காலை உணவுத் திட்டமானது 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரியில் 98.5 சதவீதமும், கரூரில் 97.4 சதவீதமும், நீலகிரியில் 96.8 சதவீதமும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,319 பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் அளவு அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் பெருமிதம்: காலை உணவுத் திட்டத்தால் மாணவா் வருகை அதிகரித்துள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ட்விட்டரில் புதன்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:

முதல்வரின் காலை உணவுத் திட்டம் மாணவா்களின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதுவே திட்டத்தின் வெற்றி. கல்வி, திராவிட வேட்கையாகும் என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.