தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - செய்தி வெளியீடு எண்: 398 நாள்: 28.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 28, 2023

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - செய்தி வெளியீடு எண்: 398 நாள்: 28.02.2023

செய்தி வெளியீடு எண்: 398

நாள்: 28.02.2023

செய்தி வெளியீடு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும். 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெறவும் திறன்சாரா வேலை பெறவும் உரிமை உண்டு. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, பண்ணைக்குட்டை அமைத்தல், நில மேம்பாட்டுப் பணிகள், நிலத்தை சமன் செய்தல், கல் வரப்பு/மண்வரப்பு அமைத்தல், தனிநபர் நிலங்களில் பழம்தரும் மரங்கள் நடுதல், நாடப்(NADEP) உரக்குழி, வெங்காயக் கொட்டகை, அசோலா சாகுபடி அலகு, தோட்டக்கலைத் தோட்டம், தனிநபர் கிணறு. மாடு/ஆடு/கோழி கொட்டகை அமைத்தல் போன்ற பிற தனிநபர்/விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்ட தொழிலாளர்களின் வேலைக்கான தேவை, வருகை பதிவேடு, ஊதிய பட்டியல் உருவாக்கம், நிதி விடுவிக்கும் ஆணை போன்றவை அனைத்தும் இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் தொழிலாளர்கள் வேலை செய்து முடித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்ட செயல்பாட்டினை ஆய்வு செய்யும் பொருட்டு ஊராட்சி அளவிலான பிரதிநிதிகளை கொண்டு சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில் சுட்டிகாட்டப்படும் குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு குறைகள் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன.

எனவே, மேற்கண்டவாறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.