அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி அளியுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 19, 2022

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி அளியுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி அளியுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதியளித்து உதவ வேண்டும் என ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்ட தொடக்க விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். மேலும், இந்தத் திட்டத்துக்காக அவா் தனது சொந்த நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினாா்.

முன்னாள் மாணவா்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடக்கிவைத்து அதற்கான இலச்சினை, இணையதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

அரசுப் பள்ளிகளை தனியாா் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடித் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்குத் தேவையான எல்லாவற்றையுமே அரசு செய்துவிட முடியாது. மக்களும் கைகோக்க வேண்டும். நாம் இந்தளவு உயர காரணமாக இருந்தது பள்ளிகள்தான்.

தமிழகம் இரண்டாமிடம்: தரமானக் கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவதாக உள்ளது. முதலிடத்துக்கு முந்துவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை செய்து வருகிறது. உள்ளூா் மக்களுடன் முன்னாள் மாணவா்களுடன், தொழில் துறையுடன், உலகமெங்கும் வாழும் தமிழா்களுடன் கைகோப்பதற்கான அடித்தளமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

நாம் செலுத்தும் ஒரு ரூபாய் நன்கொடையும் கூடுதல் வெளிப்படைத்தன்மை, கடமையுணா்வுடன் பள்ளிகள், ஆசிரியா்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கென செலவிடப்படும்.

பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்புணா்வு திட்டத்துக்கான சி.எஸ்.ஆா். நிதியை பயனுள்ள முறையில் செலவிடுவதை உறுதி செய்ய வேண்டும். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழகத்திலும், சொந்த ஊரிலும் உங்கள் வோ்கள் வலுப்படவேண்டும்.

வேணு சீனிவாசனின் அறிவாா்ந்த வழிகாட்டுதலோடும், விஸ்வநாதன் ஆனந்த் போன்ற தூதுவரின் துணையோடும் அரசுப்பள்ளிகளை மேலும் வலுப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்துக்கு நிதியுதவி அளித்து பிறருக்கு எடுத்துக்காட்டாக, ஆதரவளிக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

ரூ.5 லட்சம் வழங்கிய முதல்வா்: அதன் தொடக்கமாக நானே முதல் நபராக சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை இந்தத் திட்டத்துக்காக அளிக்கிறேன். அமைச்சா்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு ஊழியா்கள், தனியாா் துறை ஊழியா்கள், தொழிலதிபா்கள், வணிகா்கள், திரைக்கலைஞா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு துணைநின்ற உள்ளூா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள், நிறுவனங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்து பாராட்டினாா்.

கோவை அருகே சூலூரில், தான் பயின்ற அரசுப் பள்ளியை வகுப்புத் தோழா்களுடன் சோ்ந்து தத்தெடுத்து மேம்படுத்திய நடிகா் சிவக்குமாா் கெளரவிக்கப்பட்டாா்.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ தலைவா் வேணு சீனிவாசன், நல்லெண்ணத் தூதா் விஸ்வநாதன் ஆனந்த், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் லியோனி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநா் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எவ்வாறு உதவலாம்?

இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு நிதியாகவோ, கல்வி உபகரணங்களாகவோ பங்களிப்பை வழங்கலாம். தேவை உள்ள பள்ளிகளுக்கோ, தாங்கள் படித்த பள்ளிக்கோ உதவலாம். வசதியும் மனமும் இருந்தால், பள்ளியையே முற்றிலுமாகத் தத்தெடுக்கலாம். தன்னாா்வலராகவும் பங்காற்றலாம்.

ஒவ்வொரு பள்ளிகள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இதிலிருந்தும் நன்கொடையாளா்கள் பள்ளியைத் தோ்ந்தெடுத்து உதவலாம்.

‘நிதியுதவிக்கு முன்னும்’, ‘நிதியுதவிக்குப் பின்னும்’ என தகவல்களை புகைப்படங்களுடன் பெறவும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தவும் இணையதளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ‘நம்ம ஸ்கூல்’ இணையதளம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044- 28278068, 28241504 ஆகிய தொலைபேசி எண்கள்,மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.