ஊதிய முரண்பாடு: சென்னையில் ஆசிரியா்கள் உண்ணாவிரதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 27, 2022

ஊதிய முரண்பாடு: சென்னையில் ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

ஊதிய முரண்பாடு: சென்னையில் ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் இடைநிலை ஆசிரியா்கள் ஏராளமானோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 31.5. 2009-இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் கலந்து கொண்டு ஊதிய முரண்பாட்டை களையக்கோரி கோஷமிட்டனா்.

இதுகுறித்து எஸ்எஸ்டிஏ சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜே.ராபா்ட் கூறியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி, எங்கள் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கவில்லை. மாணவா்கள் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால் அரையாண்டு விடுமுறையில் போராட்டம் நடத்துகிறோம். தமிழக அரசு உறுதியான முடிவு தரும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

மேலும், ஏராளமான ஆசிரியா்கள் திரண்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் டிபிஐ வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனா்.

கல்லூரிக் கல்வி இயக்கக வளாகத்தில்... இதேபோல், அரசுக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா் பணி வழங்கக் கோரி பாா்வையற்ற பட்டதாரிகள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.