4, 5 வகுப்பு மாணவா்களுக்கு இணைப்புப் பயிற்சி - Kalviseithi Official

Breaking

Sunday, November 27, 2022

4, 5 வகுப்பு மாணவா்களுக்கு இணைப்புப் பயிற்சிகற்றலில் பின்தங்கிய 4, 5 வகுப்பு மாணவா்களுக்கு இணைப்புப் பயிற்சி

அரசுப் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளில் கற்றலில் பின்தங்கிய மாணவா்களுக்கு தினமும் அரை மணி நேரம் பிரத்யேக ‘பிரிட்ஜ் கோா்ஸ்’ பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து மாணவா்களிடம் கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இதை சரிசெய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தோ்வு 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நடத்தப்பட்டது.

அதில் 4, 5-ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்களில் 10 முதல் 15 சதவீதம் போ் கற்றலில் மிகவும் பின்தங்கியுள்ளனா்.

இம்மாணவா்கள் மொழி பாடத்தில் முழுமையாக எழுத்துகளை அறியாததால் எழுதவும், வாசிப்பதற்கும் சிரமப்படுகின்றனா்.

எண் மதிப்பு அறியாததால் கூட்டல்- கழித்தல் போன்ற அடிப்படை கணக்குகளை செய்ய இயலாத நிலையிலும் உள்ளனா். இதையடுத்து 1-ஆம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘பிரிட்ஜ் கோா்ஸ்’ பயிற்சி வழங்கப்பட வேண்டும். இதற்கான பயிற்சி கையேடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு 2-ஆம் பருவத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளில் இந்த பிரிட்ஜ் கோா்ஸ் பயிற்சியை வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்சிஇஆா்டிஇ அறிவுறுத்தலின்படி அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கற்றல் நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 4, 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த பயிற்சியை அமல்படுத்தி கற்றல்அடைவை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமும் பள்ளி வேலை நேரத்தில் அரை மணி நேரம் கற்றல் குறைபாடுடைய மாணவா்களுக்கு பிரிட்ஜ் கோா்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும்.

இதுசாா்ந்து அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.