வினாத்தாள் தயாரிப்பு குழுவை கலைக்க வேண்டி வரும் : உயர் நீதிமன்றம் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 19, 2022

வினாத்தாள் தயாரிப்பு குழுவை கலைக்க வேண்டி வரும் : உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

வினாத்தாள் தயாரிப்பு குழுவை கலைக்க வேண்டி வரும் : உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்த மனு: தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் திருக்குறளின் அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 1050 குறள்களையும் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் 2016-ல் உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை 2017-ல் தமிழக அரசு பிறப்பித்தது. இருப்பினும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் 30 முதல் 60 குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தில் குறள்கள் மட்டுமே உள்ளன. அதன் பொருள் இடம் பெறவில்லை என கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: திருக்குறளில் 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறள்களையும் மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசின் ஆணையை அதிகாரிகள் சரியாக பின்பற்றவில்லை. தற்போது பள்ளித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இல்லை. இதே நிலை நீடித்தால், தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் குழுவை கலைக்க வேண்டியது வரும். பாடத்திட்டங்களில் திருக்குறள்களை சேர்க்காவிட்டால், ஒவ்வொரு விசாரணையின்போதும் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டியது வரும். மனு தொடர்பாக தமிழ் வளர்ச்சிதுறை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர்கள் பதில் அளிக்க வேண்டும் என கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.