தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா? ஆர்டிஐ தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 19, 2022

தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா? ஆர்டிஐ தகவல்

தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா? ஆர்டிஐ தகவல்

தமிழ்நாட்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்ற ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட அதிர்ச்சித் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 1,245 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளும், தமிழ்நாட்டில் 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில் குறைந்த கல்வி கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு சில கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தது.

அதன்படி, அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி பாடங்கள் கட்டாய பாடங்களாக உள்ளது என்றும், 9 ஆம் வகுப்பு முதல் அவை விருப்பப் பாடங்களாக உள்ளதாகவும், பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக இல்லை எனவும், தமிழை மொழிப் பாடமாகத் தேர்ந்தெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் எந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், தமிழ், ஒரு மொழிப்பாடமாக இடம்பெறவில்லை எனவும், சமஸ்கிருத மொழிக்குப் பதிலாக தமிழை மொழிப் பாடமாக பயில முடியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளதாகவும், அந்த பள்ளிகளில் 109 இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும், 53 சமஸ்கிருதம் கற்பிக்கும் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்றுத் தரப்படும் என தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பிறப்பித்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் விருப்பப் பாடமாக இருக்க வேண்டும் என்றும், தமிழாசிரியர்களை நியமிக்க உத்தரவிடக் கோரியும் கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, “அதை ஏற்க முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி மட்டுமே விருப்பப் பாடமாக இருப்பதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழை கற்பது அடிப்படை உரிமை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 49 பள்ளிகளில் தமிழ் விருப்ப மொழி பாடமாக கூட இல்லை என்றும், தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல் தகவலுக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவது வைரலாகி வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட இந்த தகவல்கள் அனைத்தும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.