பள்ளிகள் நாளை திறப்பு; ஒரு வாரம் பாடம் கிடையாது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 11, 2022

பள்ளிகள் நாளை திறப்பு; ஒரு வாரம் பாடம் கிடையாது!

-தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளியில், ஒரு வாரத்திற்கு பாடம் நடத்தாமல், புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5 முதல் மே 31 வரை, தனித் தனியாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை, இன்றுடன் முடியும் நிலையில், நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை துவங்க உள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் 20ம் தேதி பிளஸ் 2வுக்கும்; வரும் 27ம் தேதி, பிளஸ் 1 வகுப்புகளும் துவங்க உள்ளன.அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை பள்ளி திறந்ததும், இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படவுள்ளன. அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து, வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களில், குறிப்பிட்ட சிலருக்கு, முதல் ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, வரும் 20ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 27ம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.கோடை விடுமுறையில், ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து வைக்கவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை முறைப்படி ஏற்படுத்தி தரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கவுள்ள நிலையில், கோடை விடுமுறைக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதால், பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. இன்றும், நாளையும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் முழுதும் நிரம்பின. முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கூட்ட நெரிசல் இருந்தது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பெரும்பாலான மக்கள், அரசு விரைவு மற்றும் ஆம்னி பஸ்களில் பயணம் செய்தனர்.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. வெளியூரில் இருந்து சென்னை வரும் வாகனங்களின் வருகை அதிகமாக இருந்ததால், வண்டலுார், பெருங்களத்துார், ஜி.எஸ்.டி., சாலையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல், சென்னை பெருங்களத்துார், கோயம்பேடு பஸ் நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட, கூட்டம் அதிகமாக இருந்தது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறைக்கு சென்ற மக்கள், மீண்டும் சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். எனவே, மக்களின் வசதிக்காக, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு, சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறோம்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு, 400க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு, இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணியர் கூட்டம் அதிகரிக்கும்போது, கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.