TRB : 2026-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாவது எப்போது? TRB: When will the exam schedule for the year 2026 be released?
ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர் பணி தேர்வுக்கு தயாராகி வருவோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல், டெட் தகுதித்தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஆர்பி ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இவ்வாறு காலஅட்டவணை வெளியிடுவது, ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில், 2026-ம் ஆண்டு பிறந்து ஜன.16-ம் தேதி ஆகியும் இன்னும் இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது டிஆர்பி. அதோடு கடந்த 2025-ம் ஆண்டு தேர்வு அட்டவணையில் இடம்பெற்றிருந்த வட்டாரக் கல்வி அதிகாரி (பிஇஓ) தேர்வுக்கான அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அட்டவணைப்படி இது நவம்பர் மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
அரசு பணிகளுக்கு ஊழியர்களை தேர்வுசெய்யும் டிஎன்பிஎஸ்சி 2025-ம் ஆண்டு தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடித்துவிட்டது. மேலும், 2026-க்கான தேர்வு அட்டவணையை டிசம்பரிலேயே வெளியிட்டது. எனவே, விரைவில் தேர்வு அட்டவணையை டிஆர்பி வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.