ஆசிரியர்களை கையேந்த வைப்பதா..? அன்புமணி ராமதாஸ் அறிக்கை - Should teachers be made to work? Anbumani Ramadoss' statement
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என்று கேள்வி எழுப்பி உள்ள பாமக தலைவர் அன்புமணி, புனிதப்பணி செய்யும் ஆசிரியர்களை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களை கையேந்த வைப்பதா..?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது. இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.