நீட் தேர்வு - 2025 எப்படி இருந்தது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 4, 2025

நீட் தேர்வு - 2025 எப்படி இருந்தது?

நீட் தேர்வு - 2025 எப்படி இருந்தது?

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.

இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இயற்பியல் பகுதியில் கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாகவும், இதனால், பதிலளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத் தேர்வு நேரத்தில் ஒன்றரை மணிநேரம் இயற்பியல் கேள்விகளுக்கே சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர். இதேபோன்று, உயிரியல் பகுதியில் கேள்விகள் நீளமாக இருந்ததால், புரிந்துகொண்டு பதில் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக சில மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உள்பட மொத்தம் 23 லட்சம் பேர் நீட் நுழைவுத் தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நீட் தோ்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் தேர்வு நடந்தது. நீட் தேர்வு மையங்களில் மாணவர்கள் கடும் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் சிறிது நேரம் கழித்தே மாணவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர்.

தேர்வு குறித்து மாணவர்கள் சிலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் பாடவாரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இயற்பியல்

பல மாணவர்கள் இயற்பியல் பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததாக உணர்ந்துள்ளனர். இயற்பியலில் நேரடிக் கேள்விகளை விட, கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெற்றிருந்ததாகவும், இதனால் கணக்கீடு செய்து பதில் அளிக்க அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் கூறினர்.

அதாவது, வினாத்தாளில் இயற்பியலுக்காக மொத்தம் உள்ள 45 வினாக்களில் கிட்டத்தட்ட 40 வினாக்களுக்கு கணக்கீடு செய்தே பதில் அளிக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டனர். வேதியியல்

வேதியியலைப் பொருத்தவரை உயிரி வேதியியல் பிரிவு கேள்விகள் எளிமையாக இருந்ததாகக் கூறினர். எனினும், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களில் இருந்து நேரடியாக வினாக்கள் இடம்பெறாமல், வேதி சமன்பாடுகளுக்குத் தீர்வு கண்டு பதில் அளிக்கும் விதமாக சில கேள்விகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

உயிரியல்

இயற்பியல், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் பாடக் கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். கேள்விகள் சற்று நீளமானதாக இருந்தாலும், புரிந்துகொண்டால் எளிதில் பதிலளிக்கும்படி இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர். எனினும், கேள்விகள் பெரிதாக இருந்ததால், புரிந்துகொள்வது சற்று கடினமாக இருந்ததாகவும் சிலர் குறிப்பிட்டனர். கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2025) வினாத்தாள் கடினமானது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2025 இளநிலை நீட் வினாத்தாளில் ஒட்டுமொத்தமாக 78% கேள்விகள் பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததாக, ஆங்கில ஊடகம் நடத்திய பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in , exams.nta.ac.in , neet.nta,nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.