ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க லஞ்சம் - ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 10, 2025

ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க லஞ்சம் - ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு



ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க லஞ்சம் - ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு Teachers' union alleges bribery to provide no-objection certificate to teachers

தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) ஒருவர் ஒரு செயலை நிறைவேற்ற முனையும் போது, அச்செயலுக்குத் தொடர்புடைய நபர் அல்லது நிறுவனம், அச்செயலை அந்நபர் நிறைவேற்றிக் கொள்ள தனக்கு தடை ஏதும் இல்லை என்று சான்றிதழ் அளிப்பதே ஆகும். இது ஒரு சட்டபூர்வமான சான்றிதழ் ஆகும்.

தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தலைமை ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பணி ஓய்வு பெறும் போது அவர்கள் பணிக்காலத்தில் நிதி சம்பந்தமான வரவு செலவுகள் மற்றும் மாணவர்களுக்கு அரசு சார்ந்த நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு கட்டணங்கள் ஆகியவை பற்றி தணிக்கை செய்யப்பட்ட தடையில்லா சான்று சென்னையில் உள்ள தலைமை தணிக்கை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.

இந்த சான்றுக்கு பணி ஓய்வு பெறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியரிடம் அவர்கள் பணிபுரிந்த வருடத்திற்கு ஏற்ப 3 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிக்கப்படுவதாக தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அமைப்பு செயலாளர் சேவியர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமை தணிக்கை அலுவலகம் செயல்பட்டு வந்தது.கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இந்த அலுவலகங்கள் மொத்தமாக கலைக்கப்பட்டு தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது.

ஓய்வு பெற உள்ள தலைமை ஆசிரியர்கள் தடையின்மை சான்று வாங்குவதற்காக இந்த அலுவலகத்திற்கு சென்றால் அவர்களது நிதி வரவு, செலவு எந்தவித தவறும் இல்லாமல் சரியாக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் 10 வருடங்களாக தலைமை ஆசிரியராக பணியாற்றி இருந்தால் அவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்கின்றனர். ஒரு சில தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நிலையில் பணப்பலன்களை உடனடியாக வாங்க வேண்டும் என்பதற்காக லஞ்சத்தை கொடுத்து தடையில்லா சான்று பெற்று வருகின்றனர்.

கொடுக்காத தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க தாமதப்படுத்தி வருகின்றனர். ஆகவே பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலன்களுக்காக பாடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மன நிம்மதியுடன் ஓய்வு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.