தலைமை ஆசிரியர் தற்கொலை - நடவடிக்கை எடுக்க கோரி வலுக்கும் எதிர்ப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 2, 2025

தலைமை ஆசிரியர் தற்கொலை - நடவடிக்கை எடுக்க கோரி வலுக்கும் எதிர்ப்பு!



Headmaster commits suicide - Strong protest demanding action!- தலைமை ஆசிரியர் தற்கொலை - நடவடிக்கை எடுக்க கோரி வலுக்கும் எதிர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தற்கொலை செய்து கொள்ளக் காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை வெள்ளிக் கிழமை முதல் கருப்பு பட்டை அணிந்து பணி செய்யப் போவதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய பள்ளியின் தேர்ச்சி முடிவுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அவமானப்படுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி 22 ஆம் தேதி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இதுவரை அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை 28ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கையொப்பமிட்டு இந்த கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சி.தங்கமணி கூறும் போது, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களின் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 21 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் கலந்து கொண்டார். அப்போது தங்கள் பள்ளியில் சமூக அறிவியல், தமிழ் பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதுள்ளதால் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்திய தலைமை ஆசிரியர் மாவட்ட ஆட்சியரின் தகவலை கூறிய போது சில ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக தடித்த வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலும் அவமானமும் ஏற்பட்ட நிலையில் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் 22ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து முறையான விசாரணை செய்து தலைமை ஆசிரியரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை 28 ந் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்வதாக முடிவெடுத்துள்ளோம். திங்கள் கிழமை +2 தேர்வு தொடங்குகிறது தேர்வுப் பணிகளிலும் கருப்பு பட்டையுடன் பணி செய்வோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.