Students are spoiled after watching the movie Pushpa..! - Government school teacher's anguish - புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் கெட்டுப்போய் உள்ளனர்..! - அரசுப் பள்ளி ஆசிரியை வேதனை
புஷ்பா படத்துக்கு வந்த அடுத்த சோதனை..!
"புஷ்பா திரைப்படம் மாணவர்களிடையே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கீனமான ஹேர்ஸ்டைல், அநாகரிகமாக பேசுவது என மாணவர்கள் புஷ்பா படத்தை பார்த்துதான் கெட்டுள்ளனர். கல்வியில் அதிக கவனத்தை செலுத்திவிட்டு, ஒழுக்கத்தை கவனிக்க தவறிவிட்டோம்.
இதெல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியராய் நான் தோற்றது போல் உணர்கிறேன். எந்த சமூக பொறுப்பும் இன்றி அப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது" -ஐதராபாத் யூசஃப்குடா பகுதி அரசுப் பள்ளி ஆசிரியை வேதனை
புஷ்பா' பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 - தி ரூல் படம் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு சென்றதால் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் அடிப்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.1871 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தால் பள்ளி மாணவர்கள் கெட்டுப் போயுள்ளதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கல்வி ஆணையத்துடன் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், “அரசு பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் ஒழுங்கற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. அவர்கள் மோசமான ஹேர் ஸ்டலை வைத்துக் கொண்டு கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். அதை மாற்றச் சொன்னால் எங்கள் பேச்சை கேட்கவே மாட்டேன் என்கிறார்கள். பெற்றோரும் அவர்களைப் பற்றி கவலைக் கொள்வதில்லை.
புஷ்பா 2 படத்தால் எங்கள் பள்ளியின் பாதி மாணவர்கள் கெட்டுப் போயுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் அவர்களை தண்டிக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு ஆசிரியராக நான் தோற்றது போல் உணர்கிறேன்” என்றார். இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு தரப்பு ஆதரவாகவும் இன்னொரு தரப்பு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.