School Education Department advises students to report sexual harassment complaints without fear - பாலியல் தொந்தரவு புகார்களை அச்சமின்றி தெரிவிக்க மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை
பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் அச்சமின்றி 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களுக்குள்ளான ஆசிரியர்களின் பட்டியல்களை சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிருபணமானால் பணிநீக்கம், கல்விச் சான்று ரத்து உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ‘‘மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? பாதுகாப்பற்ற சூழலில் உள்ளீர்களா? தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா? உடனே 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழையுங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்து பள்ளிகளிலும் தீவிரமாக விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.