கடலை மிட்டாய் தின்றால் ஆபத்து.. பள்ளிகளுக்கான சப்ளையை நிறுத்தும் கர்நாடகா அரசு.. காரணம் இதுதான் Eating peanut candy is dangerous.. The government is stopping the supply to schools.. This is the reason
கர்நாடகா அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு கடலை மிட்டாய் வழங்கும் திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி, மதியம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடகா பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த திட்டம் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டை வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் மாணவ-மாணவர்களில் ஒரு தரப்பினர் முட்டை சாப்பிடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முட்டை சாப்பிடாத மாணவ-மாணவிகளுக்கு அதற்கு நிகரான சத்தை உள்ளடக்கிய பிற உணவு பொருள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
இந்த கடலை மிட்டாய் என்பது கர்நாடகா பால் கூட்டமைப்பு சார்பில் இந்த கடலை மிட்டாய் என்பது தயாரித்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடலை மிட்டாய் என்பது மாணவ-மாணவிகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டது. தார்வார் பள்ளி கல்வித்துறை துணை ஆணையர் இதுபற்றிய கவலையை பகிர்ந்தார். அவர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், அரசு சார்பில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கடலை மிட்டாயில் அதிகப்படியான இனிப்பு மற்றும் கொழுப்பு சத்து உள்ளது. அதேபோல் பள்ளியில் கடலை மிட்டாயை சேமித்து வைப்பதிலும் சிக்கல் உள்ளது. கடலைமிட்டாய் காலாவதியாகி விடுகிறது. இது மாணவ-மாணவிகளின் உடல்நலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடலை மிட்டாய் வழங்குவதை நிறுத்தி கர்நாடகா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் கடலை மிட்டாய் சாப்பிட்டு வந்த மாணவ-மாணவிகளுக்கு இனி முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை 55 லட்சம் மாணவ-மாணவிகள் மதிய உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இதில் 8 லட்சம் மாணவர்கள் கடலை மிட்டாய் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவ-மாணவிகள் இனி முட்டை அல்லது வாழைப்பழத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.