மாநில கற்றல் அடைவு தேர்வு தேவையற்றது - ஆசிரியர்கள் கருத்து
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறை சார்பில் மாநில அடைவு சர்வே தேர்வு நடத்துவது தேவையற்றது, மாணவர்களுக்கு தேர்வு அச்சத்தை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடக்கக்கல்வித்துறை சார்பில் எஸ்.எல்.ஏ.எஸ்., எனும் மாநில அளவிலான கற்றல் அடைவு சர்வே தேர்வு பிப். 4, 5, 6 தேதிகளில் நடக்கிறது. 45 ஆயிரத்து 924 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகள் படிக்கும் 10.5 லட்சம் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் எவ்வளவு துாரம் கற்றலில் சாதித்துள்ளனர் என்பதை குறிக்கும் அடைவு திறன் கண்டறியப்பட உள்ளது. மேலும் கற்றல் இடைவெளியை கண்டறியவும், அதை மேம்படுத்தும் நடைமுறை குறித்தும் அறிவுரை வழங்கப்பட உள்ளது. ஓ.எம்.ஆர்., கேள்வித்தாளை அடிப்படையாக கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் இருந்தும், 8ம் வகுப்புக்கு கூடுதலாக அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஏற்கனவே முதல், 2ம், 3ம் பருவ தேர்வுகள் முறையாக நடத்தப்பட்டும் மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்கும் நிலையில் இந்த மாநில கற்றல் அடைவு தேர்வு தேவையற்றது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து கூறியதாவது:
கல்வி அதிகாரிகள் அடிக்கடி வந்து மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்கின்றனர். இந்த சூழலில் தேர்வின் மூலம் ஆய்வு என்பது தேவையற்றது. மாணவர்களுக்கு ஒரு வித தேர்வு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஓ.எம்.ஆர்., சீட்டில் ஆதார் எண், பிறந்த தேதி போன்றவற்றை குறிப்பிட கூறுகின்றனர். மூன்றாம் வகுப்பு மாணவர் ஆதார் எண்ணை நினைவில் வைத்திருப்பது கடினம்.இது மாணவர்களுக்கு தேர்வு பயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இத்தேர்வை பயிற்சி ஆசிரியர்கள் தான் மதிப்பீடு செய்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.