மொத்த ஆசிரியரும் பணி மாறுதல் பெற்ற பள்ளிக்கு ஒத்தை ஆசிரியர் மாற்றுப் பணியில் நியமனம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 9, 2024

மொத்த ஆசிரியரும் பணி மாறுதல் பெற்ற பள்ளிக்கு ஒத்தை ஆசிரியர் மாற்றுப் பணியில் நியமனம்!மொத்த ஆசிரியரும் பணி மாறுதல் பெற்ற பள்ளிக்கு ஒத்தை ஆசிரியர் மாற்றுப் பணியில் நியமனம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் பேரூராட்சி 1வது வார்டு காசிம்புதுப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 111 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், தலா 3 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு 2 இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில் இரு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதே போல ஒரு பட்டதாரி ஆசிரியர் நிர்வாக காரணங்களால் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில் கடந்த வாரம் பள்ளி தலைமை ஆசிரியர் பணிமாறுதல் பெற்று திருக்கட்டளை அரசுப் பள்ளிக்குச் சென்றுவிட்டார். அதே போலக் கடந்த சனிக்கிழமை நடந்த கலந்தாய்வில் எஞ்சியிருந்த ஒரு இடைநிலை ஆசிரியரும் 2 பட்டதாரி ஆசிரியர்களும் செரியலூர் மற்றும் கீழாத்தூருக்கு மாறுதல் பெற்றனர். இதனால் ஆசிரியர்களே இல்லாத அரசுப் பள்ளியானது காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஏன் இப்படி அனைத்து ஆசிரியர்களும் கூண்டோடு பணிமாறுதல் பெற்றனர் என்ற கேள்விக்கு, “கிராமத்தில் உள்ள சில பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணக்கமான நல்லுறவு இல்லாததே காரணம்” என்கின்றனர்.

இந்த நிலையில் இன்று திங்கள் கிழமை பள்ளிக்குப் பெற்றோர்களும், மாணவர்களும் வந்திருந்தனர். அங்கு பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களும் வந்தனர். மதியம் தற்காலிகமாக ஒரு இடைநிலை ஆசிரியர் மாற்றுப் பணியில் வந்து சேர்ந்ததும் ஏற்கனவே பணிமாறுதல் பெற்றிருந்த அனைத்து ஆசிரியர்களும் தங்கள் விடுவிப்பு ஆணை பெற்றுக் கொண்டு புதிய பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதனால் தற்போது தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் மாற்றுப் பணியில் வந்த ஒற்றை ஆசிரியரும், தற்காலிக ஆசிரியர்கள் இருவர், மழலையர் வகுப்பு நடத்தும் தற்காலிக ஆசிரியர் ஆகியோருடன் கணினி இயக்குநரும் சேர்ந்து வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி மாறுதல் கலந்தாய்வில் இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உள்ளது. அதே போல அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவரின் சொந்த ஊரான ஆயிங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மொத்தமாக 4 ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றதால் அங்கேயும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று உடனடியாக வெவ்வேறு பள்ளிகளில் இருந்து 4 ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமித்து பள்ளியில் பாடங்களை நடத்தத் தொடங்கி உள்ளனர். உடனே அதிகாரிகள் தலையிட்டு இரு பள்ளிகளிலும் எதனால் ஆசிரியர்கள் கூண்டோடு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றனர் என்பதை ஆய்வு செய்து அங்குள்ள குறைகளைச் சரி செய்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.