ஆசிரியர்களின் கோடை விடுமுறையை சத்தமின்றி காலி செய்யும் பள்ளிக் கல்வித்துறை.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 22, 2024

ஆசிரியர்களின் கோடை விடுமுறையை சத்தமின்றி காலி செய்யும் பள்ளிக் கல்வித்துறை..*ஆசிரியர்களின் கோடை விடுமுறையை சத்தமின்றி காலி செய்யும் பள்ளிக் கல்வித்துறை....*

நீதிமன்றத்திற்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை என்பது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் நடைமுறையாகும். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மட்டும் இந்நடைமுறை வெகுகாலமாகவே கண்ணை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

*ஆசிரியர்களுக்கும், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பில் வித்தியாசம் உண்டு* என்கிற விதிகளையெல்லாம் இவர்கள் மதிப்பதே இல்லை. ஏனென்றால் இவர்கள்தான் அதிகாரிகள் ஆயிற்றே. *ஆசிரியர்கள் இவர்களுக்குக் கீழேதானே வேலை செய்கிறார்கள்.*

அவ்வப்போது கோடை விடுமுறையில் பயிற்சி என அறிவிப்பதும். பிறகு ரத்து செய்வதுமென நடத்தியர்கள். கடந்த சில வருடங்களாக மிகத் துணிச்சலாக உத்தரவை பிறப்பித்துக் கொண்டுள்ளார்கள்.

*மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்யும் காலங்களில் பள்ளிகளில் கலைத்திருவிழா போன்ற ஏதேனும் நிகழ்வுகளை நடத்திவிட்டு மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்பதற்காக, தேர்வு முடிவுகள் வந்த பின்பு அவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என தெரியவில்லை.* ஆசிரியர்களை அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்க இவர்கள் கூறும் காரணம் *நான் முதல்வன் திட்டம் - உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.*

சென்ற ஆண்டில் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படுமென அறிவித்து வரவழைத்தார்கள். அது பிரச்சனையாகியதால், இந்த ஆண்டு வாய்மொழி உத்தரவாகவே காரியம் சாதிக்கிறார்கள்.

இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கும் போதே மே மாதம் 5ஆம் தேதியை நெருங்கி விட்டது.

தொடர்ந்து 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதற்காகவும், அதைத்தொடர்ந்து நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் என ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்ததோடு, EMIS வலைதளத்தில் ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யவும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்கள். பின்னர் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், அது தொடர்பான பணிகள். தொடர்ந்து நான் முதல்வன் - உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிக்கான பயிற்சி என தொடர்ந்து ஆசிரியர் பெருமக்கள் கோடை விடுமுறையிலும் பள்ளிக்குச் சென்று கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு சென்று சேர்ந்து விட்டதா? என்பதை OTP மூலம் உறுதி செய்யும் பணியை செய்யச் சொல்லி தற்போது புதிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இயல்பாகவே நலத்திட்டங்கள் அனைத்தும் அமைச்சுப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய ஒன்றாகும். ஆனால் OTP மூலம் சரிபார்க்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவை பிறப்பிக்கப்பட்டதோடு அப்பணியை காலையிலும், மாலையிலும் மட்டுமே செய்ய வேண்டும் எனவும், மதிய வேலைகளில் பெற்றோர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இந்த OTP தொடர்பாக அலைபேசியில் பேசிய கல்வி அதிகாரி ஒருவரை பெற்றோர் ஒருவர் சரமாரியாக கவனித்தும் உள்ளார். இத்தனைக்கு பிறகும் OTP சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு தொடர்கிறது.

இது மட்டும் இல்லாமல் தற்பொழுது சென்ற கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளார்களா?, இல்லையா? என்பது குறித்தும் ஒரு சர்வே எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த சர்வேயையும் ஆசிரியர்கள்தான் செய்து கொண்டுள்ளார்கள்.

இப்படியாக தொடர்ச்சியாக நாள்தோறும் புதுப் புது உத்தரவாக மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி இன்று 21ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஆசிரியர்கள் கோடை விடுமுறையிலும் வேலை செய்து கொண்டுள்ளார்கள். *GPF, நிறுத்தப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாட்டை சரி செய்யதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்* என ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த ஆசிரிய பெருமக்களுக்கு இதுவரை ஒரு ரூபாய்கூட பணப்பலன் கிடைக்கவில்லை. மாறாக உள்ள விடுப்புகளும் பறிபோய் கொண்டு இருக்கிறது.

உண்மையிலேயே இது போன்ற கோடை விடுமுறையை காலி செய்யக்கூடிய உத்தரவுகள் ஆட்சியாளர்களுக்கு தெரிந்துதான் உத்தரவிடப்படுகிறதா? அல்லது ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் நடக்கிறதா? எனத் தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க கோடை காலத்தில் பள்ளிகளில் எந்த வித சிறப்பு வகுப்போ, வேறு விதமான பயிற்சிகளோ நடத்தக்கூடாது என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருப்பதை பள்ளிக்கல்வித்துறை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையோ.

*DRPGTA,*

*மாநில மையம்*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.