என்னதான் செய்யும் அரசாணை 243 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாள்:06.02.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 6, 2024

என்னதான் செய்யும் அரசாணை 243 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாள்:06.02.2024



தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாநில மையம்

நாள்:06.02.2024

**************************

-ச.மயில்

பொதுச்செயலாளர்

**************************

என்னதான் செய்யும் 243

**************************

அரசாணை 243 தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த அரசாணை தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 99 சதவீத ஆசிரியர்களுக்கு எவ்விதப் பயனையும் நிச்சயமாகத் தரப்போவதில்லை. இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் இதன் உண்மையான பாதிப்பை அனைவரும் உணர்வார்கள். இந்த அரசாணையால் யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த அரசாணையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் உணர்வார்கள். இந்த அரசாணை ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்களைத் தொலைநோக்குச் சிந்தனையோடு உணர்ந்துதான் பழமையான ஆசிரியர் சங்கங்களின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவருமே இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் மாபெரும் கூட்டமைப்பான டிட்டோஜாக் அமைப்பு இந்த அரசாணையை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும் என்று களப்போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட சங்கங்களும் இணைந்து இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று ஒற்றைக் குரலில் ஓங்கி ஒலிப்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் அரசாணை 243ஐ ரத்து செய்தல், 12.10.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்றி உடனடியாக ஆணைகளை வெளியிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11.01.2024 அன்று வட்டாரத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுத் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு வலுவாகத் தெரிவித்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக 27.01.2024 அன்று டிட்டோஜாக் சார்பில் நடைபெற்ற மாவட்டத் தலைநகர் உண்ணாவிரதப் போராட்டமும் மாநிலம் முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடந்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டங்களின் வலிமையை, ஆசிரியர்களின் எதிர்ப்புணர்வினை தமிழ்நாடு அரசு கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். தொடர் போராட்டங்களைத் தவிர்க்கும் முனைப்புடன் பள்ளிக்கல்வித்துறையும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையை இந்த அரசு செய்ததாக எதிர்கால வரலாற்றில் பதிவாகும். கடந்த 23.01.2024 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து அரசாணை 243ஐ ரத்து செய்யக் கோருவது தொடர்பாக முறையீடு செய்வது என டிட்டோஜாக் தலைவர்கள் முடிவெடுத்து தலைமைச் செயலகத்திற்குச் சென்றனர். அன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருந்த சூழலிலும் காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நேரம் ஒதுக்கி டிட்டோஜாக் தலைவர்களுடன் இது தொடர்பாக விவாதித்ததும், இந்த விவாதத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரையும் பங்கேற்கச் செய்ததும் நல்ல அம்சங்களாகும்.

சுமார் ஒரு மணி நேரம் அரசாணை 243ன் பாதிப்புகள் தொடர்பாகவும், ஏற்கனவே ஒத்துக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் டிட்டோஜாக் தலைவர்கள் எடுத்துக் கூறினர். ஆனாலும், இன்று வரை பள்ளிக்கல்வித்துறையிடமிருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லாதது என்பது தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசாணை 243க்கு எதிராக தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள சூழலில், அரசாணை 243ஐ வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து ஒரு ஆசிரியர் சங்கம் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உரை தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் “இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையூறு செய்பவர்கள் நாங்கள் அல்ல. அது போல பட்டதாரி ஆசிரியர்களைப் பட்டுப் போக வேண்டும் என்று நினைப்பவர்களும் நாங்கள் அல்ல” என்று எதுகை மோனையுடன் குறிப்பிட்டுள்ளார். தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பெரும்பான்மை இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பட்டவர்த்தனமாகப் பறிக்கும் அரசாணையை வெளியிட்டு விட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம் என்று கூறுவது எவ்வாறு பொருத்தமாக இருக்கும்? பதவி உயர்வு வாய்ப்பு மிக மிகக் குறைவாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இருந்த பதவி உயர்வு வாய்ப்பையும் பறிப்பது என்பது எவ்வகையில் நியாயம்? மாநாட்டில் பேசிய அமைச்சர், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர் என பதவி உயர்வு வாய்ப்புக்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற இருந்த வாய்ப்பை அரசாணை 243 பறித்துள்ளது என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உணர வேண்டாமா? மற்ற துறைகளில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேரும் ஒருவர் தனது 30 ஆண்டு பணிக்காலத்தில் அரசிதழ் பதிவு பெற்ற உயர் அலுவலர்களாகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உள்ள சூழலில், இடைநிலை ஆசிரியர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றினாலும் இடைநிலை ஆசிரியராகவே இருப்பது என்பது எவ்வகையில் நியாயம்? அவர்களுக்கு இருந்த ஒரு சில பதவி உயர்வு வாய்ப்புக்களையும் பறிக்கும் அரசாணையை எவ்வாறு வரவேற்க முடியும்?

இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாகப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற இருந்த வாய்ப்பைப் பறித்து விட்டு, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற பின்பு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறலாம் எனக் கூறுவது, நேரடியாக மூக்கைத் தொடுவதைவிட கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவது சிறந்தது என கூறுவதற்க்குச் சமமல்லவா?

அரசாணை 243 நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 100 சதவீதம் பயனளிக்கக்கூடிய அரசாணை என்று சிலர் பேசுவது தவறானது என்பதை அவர்களே விரைவில் உணர்வார்கள். 2002, 2003, 2004 ஆம் ஆண்டுகளில் நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களில் பலர் தற்போதைய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் எதிர்வரும் ஆண்டுகளில் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பதவி உயர்வில் செல்லும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. ஆனால், அரசாணை 243 நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சொந்த ஒன்றியத்தில் பதவி உயர்வில் செல்வதைத் தடுப்பதோடு, அவர்களது பதவி உயர்வு வாய்ப்பையும் பறிக்கிறது. உதாரணமாக ஒரு ஒன்றியத்தில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி பெண் ஆசிரியர் ஒருவர் அந்த ஒன்றியத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அந்த ஒன்றியத்தில் உள்ள ஒரே ஒரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் அவருக்கு உறுதியாக கிடைக்கக்கூடிய நிலை இருந்தது. ஆனால், அரசாணை 243 வெளியான பின்பு வெளியிடப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான மாநில முன்னுரிமையில் அவர் 1700ஐ தாண்டிய முன்னுரிமை பெற்றுள்ளார்.

எனவே, அவருக்கு சமீபகாலத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் அவர் பணியாற்றும் ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் 500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒன்றியத்தில் உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியருக்குச் செல்லும். 500 கிலோ மீட்டர் தாண்டி அந்த ஆசிரியர் வர விரும்பாத சூழலில் அவர் பதவி உயர்வைத் துறக்க வேண்டிய நிலை ஏற்படும். மாநில முன்னுரிமையில் 1700ஐ தாண்டிய முன்னுரிமையில் இருக்கும் பட்டதாரி பெண் ஆசிரியைக்கு இன்னும் 5 ஆண்டுகள் கழித்துப் பதவி உயர்வு கிடைக்கும்போது, 600 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ஒன்றியத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அப்போது குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு அவரால் செல்ல முடியாது. பதவி உயர்வைத் துறக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறாக பெண் ஆசிரியர்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய அரசாணையாக 243 உள்ளது.

அரசாணை 243க்கு ஆதரவாக உள்ள சிலர் மாநில முன்னுரிமை வந்துவிட்டால் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் செல்வது எளிதாகும் என்று நியாயம் கற்பிக்க முனைகிறார்கள். தற்போது கூட பொதுமாறுதல் கலந்தாய்வைத் தாண்டி பொதுமாறுதலுக்கு முன்பும், பொதுமாறுதலுக்குப் பின்பும் விதிகளுக்குப் புறம்பாக இன்று வரை வழங்கப்பட்டு வரும் மாறுதல் ஆணைகள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை தனது குடும்பம் குழந்தைகளை விட்டுவிட்டு 20 ஆண்டுகாலமாக தருமபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் முன்னுரிமைப்படி தனக்கு மாவட்ட மாறுதல் கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் பணியாற்றி வரும் நிலையில், அவருக்குக் கிடைக்க வேண்டிய பணியிடத்தை அவரைவிட பணியில் மிகவும் இளைய ஆசிரியர் ஒருவர் பணம் கொடுத்து தட்டிப் பறிக்கும் அவல நிலை இன்றுவரை நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியுமா? இவ்வாறிருக்க ஒன்றிய முன்னுரிமையிலேயே இத்தனை மாறுதல் முறைகேடுகள் நடைபெறும் நிலையில், மாநிலl முன்னுரிமையில் எத்தனை மாறுதல் முறைகேடுகள் நிகழும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மாநில முன்னுரிமை என்று வந்தால் எங்கு மாறுதலில் சென்றாலும் நமது முன்னுரிமை மாறாது என்றும், அதனால் பதவி உயர்வு எளிதாகக் கிடைக்கும் என்றும் சிலர் வாதத்தை முன் வைக்கிறார்கள். அவ்வாறு முன்னுரிமையைத் தக்க வைக்கும் ஒருவருக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்தால் அது யாருக்குப் பயன்படும்? பெண் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை அல்லவா ஏற்படுத்தும்? 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த ஒரு அரசாணையை மாற்றும்போது, எதற்காக 60 ஆண்டுகாலமாக இந்த அரசாணையை நடைமுறையில் வைத்திருந்தார்கள்? இதை மாற்றுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி விரிவான கலந்தாய்வை நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து 99 சதவீத ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணையை அவசர கோலத்தில் வெளியிடுவது எவ்வாறு சரியாக இருக்கும் என்பதுதான் நமது கேள்வி.

அரசாணை 243க்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில் அரசாணை வெளியாவதற்குக் காரணமான உயர் அலுவலர்கள் தாங்கள் வெளியிட்ட அரசாணையை எப்படியாவது நிலை நிறுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், உயர் அலுவலர்கள் இதை ஒரு கௌரவப் பிரச்சினையாக நினைக்காமல் எழுந்துள்ள பெரும் எதிர்ப்பலையைக் கணக்கில் கொண்டும், பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டும் உடனடியாக அரசாணை 243ஐ ரத்து செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் களப்போராட்டங்களே தொடர்கதையாகி விடும். எனவே, ஒரு நல்லெண்ண அடிப்படையில் தமிழ்நாடு அரசு அரசாணை 243ஐ ரத்து செய்திட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வித்துறை சீராக, சிறப்பாக, வழக்கம் போல் இயங்கிட வழிவகை செய்திட வேண்டும்.

***********************

தோழமையுடன்

ச.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.