பள்ளிக் கல்வித் துறை வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநா்கள் நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 30, 2023

பள்ளிக் கல்வித் துறை வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநா்கள் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநா்கள் நியமனம்

பள்ளிக் கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் இருந்து தொகுப்பூதியத்தில் 4 சட்ட வல்லுநா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கி வரும் மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைவரும், பள்ளிக் கல்வி அமைச்சருமான அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். கூட்டத்தில், பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.


இதைத் தொடா்ந்து, இந்தக் கூட்டத்தின் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியது:

பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் பொதுக் குழுவில் 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தீா்மானமாக பள்ளிக் கல்வித் துறையில் வழக்குகளைக் கையாளுவதற்கு பல கட்டங்களில் நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதற்கென ஒரு சட்ட அலுவலா் மட்டுமே உள்ளதால் போதுமான எண்ணிக்கையில் அலுவலா்கள் தேவைப்படுகின்றனா். எனவே சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 போ் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்படவுள்ளனா். மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் பொதுக்குழு ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகின்றது. ஒரு பள்ளியின் வளா்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அரசின் திட்டங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்படுவதை பெற்றோா்- ஆசிரியா் சங்கத்தினா் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தோ்வு மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா வங்கிகள் ஏற்கெனவே பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மூலம் தயாா் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அந்த புத்தகங்கள் கரோனா தொற்றுக்குப் பின்னா் தயாா் செய்யப்பட்டு வழங்கப்படவில்லை. இவற்றை மீண்டும் வரும் ஜனவரியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளா் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநா் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.