ஜனநாயக வழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்ததற்கு தலைமை செயலக சங்கம் கடும் கண்டனம் . - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 5, 2023

ஜனநாயக வழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்ததற்கு தலைமை செயலக சங்கம் கடும் கண்டனம் .

ஜனநாயக வழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்ததற்கு தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக ஜனநாயக வழியில் தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியினை தற்போது ஆளுகின்ற அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் போராடி வரும் ஆசிரியர்களை கைது செய்தமைக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை தமிழ்நாடு அரசிற்குத் தெரிவித்துக் கொள்கிறது. இதைப்போன்ற நடவடிக்கைகள் போராடுகின்ற ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அதோடு மட்டுமல்லாமல், இனிமேல் போராட்டத்தில் ஈடுபட்டால் இதைப்போன்ற அராஜக-கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் குரல்வளையை நசுக்கும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கருதுகிறது.

எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடும் ஆளும் கட்சியாக இருந்தால் வேறொரு நிலைப்பாடும் எடுக்கும் ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அடையாளப்படுத்தத் தயங்க மாட்டார்கள். அதற்கான எதிர்வினையாற்றவும் தயங்க மாட்டார்கள். தங்களது கோரிக்கைகளை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் செவி மடுக்காதபோது, அதனை வெல்வதற்காக இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது இந்திய ஜனநாயகத்தில் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இதனை யார் தடுத்தாலும் அதனை எதிர்கொள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தயாராக உள்ளனர். அரசின் இந்த அராஜக கைது நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதைப்போன்ற நடவடிக்கைகள் தொடருமானால், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் பிற தோழமை அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் கண்டன இயக்கங்களை நடத்தும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் உறுதுணையாக எப்போதும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் இருக்கும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.