ஆசிரியர்களின் போராட்டக் களமாக மாறிய சென்னை டிபிஐ வளாகம்: ஒரே நாளில் 4 சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 29, 2023

ஆசிரியர்களின் போராட்டக் களமாக மாறிய சென்னை டிபிஐ வளாகம்: ஒரே நாளில் 4 சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

ஆசிரியர்களின் போராட்டக் களமாக மாறிய சென்னை டிபிஐ வளாகம்: ஒரே நாளில் 4 சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை பழைய டிபிஐ வளாகம் போராட்டக் களமாக மாறியது.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (பழைய டிபிஐ வளாகம்) பள்ளிக்கல்வி துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று அங்கு ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.

குடும்பத்தினருடன் பங்கேற்பு:

ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், பழைய டிபிஐ வளாகம் நேற்று ஆசிரியர்களின் போராட்டக் களமாக மாறியது.

‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதேபோல, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பிலும், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை, டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம், பணி நியமனத்துக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் குவிப்பு:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றதால் பழைய டிபிஐ வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து, பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதனால், இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 4 பேர் மயங்கி விழுந்தனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.