பெண் ஆசிரியரா, ஆசிரியையா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 4, 2023

பெண் ஆசிரியரா, ஆசிரியையா?

பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை உயர்நிலைப் சொல்லிவிடுகிறோம். அதற்குமேல் 11, 12ஆம் வகுப்புகள் உள்ள பள்ளியை, மேநிலைப் பள்ளி என்று எழுதுவதா? மேனிலைப் பள்ளி என்று எழுதுவதா? என்று சிலருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.

இதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் – மேல்நிலைப் பள்ளி என்று எழுதுவதே எல்லாருக்கும் புரியக்கூடியது. இலக்கண வழியில் சேர்த்து எழுத வேண்டுமானால் மேனிலைப் பள்ளி என்று எழுதலாம். மேல் + நிலை = மேல்நிலை = மேனிலை என்பதே இலக்கண மரபு. மேநிலை என்பது தவறான வழக்கு. இப்படியே முதல் + நிலைக் காவலர் என்பதை, முதனிலைக் காவலர் என்பதே சரியானது. அல்லது, முதல்நிலைக் காவலர் என்பதே எளிதும் தெளிவானதும் ஆகும்.

ஆசிரியர் - ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பலர்பால் சொல். அதுவும், மாதா பிதா குரு எனும் வரிசையில் மரியாதைக்குரிய சொல். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அளைவருக்கும் பொதுவான சொல். (கல்லூரி ஆசிரியரைப் பிரித்து அறிவதற்காகவே பேராசிரியர் என்கிறோம்) இதற்குரிய ஆங்கிலச் சொல் "Teacher' என்பதும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவான - பலர்பால் சொல்தான். ஆனால், பெண் ஆசிரியர் சிலர், ஆசிரியர் என்பதை ஆண்பாலாக நினைத்துக்கொண்டு, தம்மை 'ஆசிரியை' /'தலைமை ஆசிரியை' என்று சொல்லிக் கொள்கிறார்கள்; எழுதுகிறார்கள்; முத்திரையும் (ரப்பர் ஸ்டாம்ப்) செய்து பயன்படுத்துகிறார்கள்.

இது தவறு. ஆண் ஆசிரியரை "ஆசிரியன்" என்று யாரும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால், ஒருவேளை அதற்குரிய பெண்பால் சொல்லாக 'ஆசிரியை' என்பதைச் சொல்லலாம். ஆசிரியர் எனும் சொல்லே மரியாதைக்குரிய பலர்பாலாக இருக்கும்போது, ஆசிரியை என்று எழுதுவது தம்மைத் தாமே தாழ்த்துவதே. நல்ல வேளையாக, அரசு ஊழியரில் பெண் ஊழியர் யாரும் தம்மை 'ஊழியை" என்பதில்லை.

ஆண்கள் மட்டுமே தலைவர்களாக இருந்த காலத்தில், “தலைவன்' எனும் சொல் பெருவழக்காக இருந்தது. பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த போது, 'தலைவர்' என்பது பொதுவான மரியாதைக்குரிய பலர்பால் சொல்லானது. இதே காலத்தில் 'ChairMan' எனும் ஆங்கிலச் சொல், பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்த போது, 'ChairWoman' என்றாகி, பிறகு அதுவும் மாறி, 'ChairPerson' எனப் பலர்பாலானது.

பதவிகளே தமக்குரிய காலமாற்றத்தை உணர்ந்து, தமது மரியாதைச் சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, பெண்கள் தமது பெருமை உணர்ந்து, உரிய சொற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.