தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.76 லட்சம் பேர் பங்கேற்கின்றனர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 5, 2023

தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.76 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.76 லட்சம் பேர் பங்கேற்கின்றனர் - Tamil Nadu, Puducherry Class 10th Exam Starts Tomorrow: 9.76 Lakh Candidates

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவியர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். அதன்படி, கடந்த மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது.

தமிழக தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்த அட்டவணையின்படி, நாளை 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. இது வரும் 20ம் தேதி வரை நடக்கும். இத் தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12,639 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 76,089 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 பேர் மாணவியர். புதுச்சேரியில் 15 ஆயிரத்து 566 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 7,911 பேர் மாணவர்கள், 7,655 பேர் மாணவியர். இவர்களை தவிர தனித் தேர்வர்கள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மாற்றுப் பாலினத்தவர்கள் 5 பேர் எழுதுகின்றனர். சிறைவாசிகள் 264 பேரும், மாற்றுத் திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாட்டில், மொத்தம் 3,976 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தனியார் பள்ளிகளில் 180 தேர்வு மையங்களும் அடங்கும். புதுச்சேரியில் 287 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுத 49 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைகளில் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,100 பறக்கும் படைகள்அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 1,135 உள்ளனர். தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு காலை 10 மணி அளவில் தொடங்கும். காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடம், கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் என மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு பிறகு விடை எழுதலாம். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தேர்வு மையங்களில் செல்போன், கணினி, கால்குலேட்டர் போன்றவை எடுத்து செல்ல தடை உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். மேலும், மின் தடை வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்வு பணியில், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 13,151 பேருக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா போன்ற குறைகள் உள்ள மாணவ-மாணவியர் சொல்வதை எழுத தனி நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகளை தெரிவிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். புகார் தெரிவிக்க விரும்புவோர் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.