“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 20, 2023

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில்

“அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்” ஆளுநருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில் - "No matter how much the government school teachers are paid, it's enough," replied the Minister of School Education to the Governor

அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என ஆளுநர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும்?” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாளுக்கு நாள் அரசாங்க கல்விக்கூடங்கள் கீழே சென்று கொண்டிருக்கிறன. சிஎஸ்ஐ அறிக்கையில் கூறுவது என்னவென்றால், 73 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கிறார்கள். 27 சதவீத மாணவர்கள் தான் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுகிறார்கள்” என கூறினார். இந்த கருத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘வானவில் மன்ற திட்டத்தின்’ கீழ் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி நேற்று பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்த பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இத்துறையில் முன்னெடுக்க முடியும். பட்ஜெட்டில் பிற துறை சார்ந்த பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்து இருக்கின்றனர். கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பள்ளிக்கல்வித்துறையோடு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட பிற பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் தகும் என்ற கருத்தை நான் கொண்டுள்ளேன். ஆளுநரும் மாணவராக இருந்து வந்தவர் தான். ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் என்று அவரது கருத்து வேதனையை அளிக்கிறது.” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.