தமிழ்நாடு அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் கருத்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 20, 2023

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் கருத்து

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் கருத்து Government of Tamil Nadu Financial Statement 2023-24 - Opinion of State Organization of Tamil Nadu Primary School Teachers Alliance

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 05/2023 நாள்: 21.03.2023

தி.மு.க அரசு தாக்கல் செய்த 3வது பட்ஜெட்டிலும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து!

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்துள்ள மூன்றாவது பட்ஜெட்டிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை மாநில நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பல வாக்குறுதிகளை தி.மு.க எழுத்துப் பூர்வமாக வழங்கியது. குறிப்பாக தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பல்வேறு துறைகளில் உள்ள இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புதல், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்,

சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல் எனப் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

அந்த வாக்குறுதிகளையெல்லாம் படிப்படியாக தி.மு.க அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது. கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளிலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், 2023-2024 நிதிநிலை அறிக்கையிலாவது அதற்குரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்திய நிதிநிலை அறிக்கையாக 2023-2024 நிதிநிலை அறிக்கை அமைந்துவிட்டது.

குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குதல், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குதல், அகவிலைப்படியை ஒன்றிய அரசு அறிவித்த தேதி முதல் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பாக ஒற்றை வார்த்தை கூட நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. எனவே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புக்களை வெளியிட வேண்டும். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அரசுத் துறைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அறநிலையத்துறைப் இந்து சமய பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு சரியானது என்றாலும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகைகள், விடுதி வசதி, அப்பள்ளிகளுக்கு கிடைத்து வந்த நிதிகள் மற்றும் அப்பள்ளிகளில் குறிப்பிட்ட பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின்கீழ் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசின் தற்போதைய அறிவிப்பிற்குப் பின்பு மாநகராட்சி பள்ளிகள் மட்டுமே மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளன என்பதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு அப்பள்ளிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்.

மேலும், முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1000/- ஆகியவை வரவேற்கத்தக்க திட்டங்கள் என்றாலும், இத்திட்டங்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்குக் கிடைக்காத சூழல் உள்ளது. எனவே, இத்திட்டங்களை அரசு உதவிபெறும் மாணவர்களுக்கும் விரிவு படுத்தி இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை சார்ந்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்புக்குரியவை என்றாலும், பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமனம், பணியாளர்கள் நியமனம் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.