மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 4, 2023

மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்

அண்ணாமலை பல்கலையில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல்: உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை

சேலம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பணியாளர்கள், பல்வேறு துறைகளுக்கு பணிநிரவல் செய்யப்படுகின்றனர். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என ஏராளமானோர், கூடுதலாக பணியில் சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர், மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால், பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாக, அங்குள்ள பேராசிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ேமலும் பலரை, பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த கூட்டத்தில், இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டு 367 பேராசிரியர்கள் உள்பட மொத்தம் 1,390 பணியாளர்களை, பல்வேறு துறைக்கு மாற்றம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 367 பேராசிரியர்களில், அதிகபட்சமாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 145 பேரும், வேளாண் துறை கல்லூரிகளுக்கு 127 பேரும், அறநிலையத்துறை கல்லூரிக்கு 45 பேரும், தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 34 பேரும் என பணிநிரவல் செய்யப்படுகின்றனர். இதேபோல், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர்கள், பிரிவு அலுவலர் என 1,023 ஆசிரியல்லா பணியாளர்கள், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், வேளாண் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்பட பல துறைகளுக்கு மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் முன்பு, ஆசிரியரல்லா பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகள், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏராளமானோர் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு வரும் தங்களது நிலை சார்ந்து, பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இதேபோல், வெளி மாவட்டங்களிலும், குடியிருப்பிலிருந்து நீண்ட தொலைவிலும் பணிபுரிந்து வருபவர்கள், இடமாறுதல் கோரி வருகின்றனர். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து, 367 பேராசிரியர்கள் உள்பட 1,390 பணியாளர்கள் திடீரென பிற துறைகளுக்கு பணிநிரவல் செய்யப்படுகின்றனர். இதனால், அந்தந்த நிலைக்கான பணியிடங்கள் நிரம்பும். அதேசமயம் ஏற்கனவே அந்தந்த துறையில் பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடையவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பலர் பதவி உயர்வு பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதேபோல், இடமாறுதலுக்காக காத்திருந்தவர்களின் வாய்ப்பும் பறிபோயுள்ளது. கல்லூரிகள் மட்டுமின்றி, அனைத்து துறை அலுவலகங்களிலும், இதே நிலை தான் காணப்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக பதவி உயர்வுக்கும், இடமாறுதலுக்கும் காத்திருந்தவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, பணிநிரவல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.