பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் - இயக்குநர் வெற்றிமாறன் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 4, 2023

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் - இயக்குநர் வெற்றிமாறன்

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்! வெற்றிமாறன் சொன்னவுடன் அதிர்ந்த கூட்டம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சாதி சான்றிதழ்கள் குறித்தும் அவை பள்ளிகளில் கேட்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தலைநகர் சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாகக் கூட்டத்தில் இருந்தவர்கள் கேட்ட கேள்விக்குத் தனது மனதுக்குபட்ட பதில்களை பளீச்சென சொன்னார்.

இயக்குநர் வெற்றிமாறன்

அப்போது மாணவி ஒருவர், 'அனைத்து சாதிகளும் சமம் என்று அரசே சொல்கிறது. இருந்த போதிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிவங்களில் சாதியைக் கண்டிப்பாக நிரப்ப வேண்டும் என்கிறார்களே' என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், 'இது எனக்கே கொடுமையான விஷயம் தான். நான் எனது பிள்ளைகளுக்கு எந்த சாதி அற்றவர் என்ற சான்றிதழைப் பெற முயன்றேன். இருப்பினும், அப்படித் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இது குறித்து நீதிமன்றத்திற்கும் போய் பார்த்தேன். அங்கும் நிச்சயம் எதாவது சாதியைக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

சாதி சான்றிதழ்

எதுவும் வேண்டாம் என்று சொன்ன போதும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வேறு சில சம்பவங்களையும் குறிப்பிட்டோம். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. எந்தவொரு இடத்திலும் சாதி சான்றிதழ் தராமல் இருக்கவே தேவையான வேலைகளைச் செய்து வருகிறேன். பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்.. யாருக்குத் தேவையில்லையோ அவர்களுக்கு அப்படியொரு ஆப்ஷன் இருக்க வேண்டும். சமூக நீதிக்குத் தேவை

அதேநேரம் யாருக்கு அது அவர்களின் உரிமையை வாங்கி தருகிறதோ.. அந்த இடத்தில் அது தேவை என்றே நினைக்கிறேன். சமூக நீதிக்காக சில இடங்களில் அது தேவைப்படவே செய்கிறது. எனக்கு அது தேவைப்படவில்லை.. அது வேண்டாம் என்று சொல்லும் உரிமையும் ஆப்ஷனும் எனக்கு இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அதேநேரம் அனைவராலும் ஒரே நேரத்தில் அப்படித் தூக்கிப் போட்டு விட முடியாது.. சமூக நீதியை நிலைநாட்ட அது தேவைப்படவே செய்கிறது' என்று அவர் தெரிவித்தார்.

ஹீரோக்கள் தலைவர்கள் இல்லை

தொடர்ந்து சினிமா ஹீரோக்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'நமது தமிழ்நாட்டில் எம்ஜிஆர் அளவுக்கு யாருக்கும் ரசிகர் பட்டாளம் இருந்தது இல்லை. அன்றும் சரி. இன்றும் சரி எப்போதும் நாம் ஹீரோக்களை கொண்டாடியே வந்துள்ளோம். அன்றைக் காட்டிலும் இன்று இணையம் இருப்பதால் அது தெளிவாகத் தெரிகிறது. சில நேரங்களில் இந்த போக்கு எனக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. சரி இல்லை

நடிகர்களைத் தலைவர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடிகர்கள் பெரும் நட்சத்திரங்கள் தான்.. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர்களைத் தலைவர்கள் எனச் சொல்வதில் உடன்பாடு இல்லை.. அதைத் தவிர்க்கலாம் என்றே நினைக்கிறேன். இந்தக் காலத்தில் அது அதிகரித்தே உள்ளது. அந்த காலத்தில் நடிகர்கள் அரசியலுடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர். இதனால், அவர்களை அப்படிச் சொல்வது சரியாக இருந்தது. ஆனால், இன்றுள்ள நடிகர்களை அப்படிச் சொல்வது சரியாக இருக்க முடியாது.

தனிநபராகச் செய்ய முடியாது

சினிமா என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. சினிமா மூலம் தகவல்களைக் கொண்டு சேர்க்க முடியாது.. ஆனால், அந்த ஒரு விஷயத்தால் ஏற்படும் எமோஷனை கொண்டு சேர்க்க முடியும். ஒரே சித்தாந்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாகப் படங்களை எடுக்கும்போது அது இயக்கமாக மாறுகிறது. அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், தனிநபராக எதுவும் செய்ய முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.

மாபெரும் தமிழ் கனவு

அப்போது அங்கிருந்த ஒருவர் உங்களின் மாபெரும் தமிழ் கனவு என்ன என்று ஒருவர் கேட்ட கேள்விக்குச் சற்று யோசித்த இயக்குநர் வெற்றிமாறன், 'தமிழ்நாடு' என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி அப்ளாஸ் வாங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது மட்டுமின்றி அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் மனம் திறந்து பதிலளித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.