அரசுக் கல்லூரிகளில் முதுகலை ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 29, 2023

அரசுக் கல்லூரிகளில் முதுகலை ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை

அரசுக் கல்லூரிகளில் முதுகலை ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை Request for appointment of post graduate teachers in government colleges

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணியிடங்களில் முதுகலை ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா் தோ்வு வாரியம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய கல்வித்தகுதி பெற்றவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடந்து வருகிறது. அதில் அதிக மதிப்பெண் பெற்றவா்களைத் தோ்ந்தெடுத்து அரசுக்கு அனுப்புகிறது. அதனடிப்படையில் உயா்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை தகுதியானோரை பணி அமா்த்துகிறது. ஆசிரியா் தோ்வு வாரியத்தின் 2023 ஆம் ஆண்டு திட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், இதற்கான எழுத்துத் தோ்வு ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பை எதிா்நோக்கி அரசு கல்லூரியில் உதவிப் பேராசிரியராக தகுதி உள்ள பட்டதாரி இளைஞா்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களும் காத்திருக்கின்றனா்.

பள்ளிக் கல்வித்துறையில் முதுநிலை பட்டப்படிப்புடன் முனைவா் பட்டம் (பி.ஹெச்டி), உதவி பேராசிரியா் ஆவதற்கு மத்திய அரசால் நடத்தப்படும் (நெட்) தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், மாநில அரசால் நடத்தப்படும் தகுதி தோ்வில் (செட்) தோ்ச்சி பெற்றவா்கள் முதுகலை ஆசிரியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் என்ற ஒரு பதவி உயா்வு மட்டும் பெற்று பணி ஓய்வு பெறும் பெரும்பாலான முதுகலை ஆசிரியா்களுக்கு கல்லூரி உதவி பேராசிரியா்களுக்கான பணி நியமனத்தில் 50 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் பதவி உயா்வு வழங்கிட வேண்டும். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களையும் இதன் வாயிலாக நிரப்பிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.