தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் பத்திரிக்கைச் செய்தி - நாள் 9.1.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் பத்திரிக்கைச் செய்தி - நாள் 9.1.2023

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் - நாள் 9.1.2023

பத்திரிக்கைச் செய்தி எண் 2

1.1.2023 முதல் 4 விழுக்காடு அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட அரசாணையில் ஒன்றிய அரசின் அகவிலைப்படி வழங்கிய குறிப்பாணையினை திட்டமிட்டு தவிர்த்ததற்கு கடும் கண்டனம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 1.1.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் 1.1.2023 முதல் மாநில அரசின் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படியினை 4 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கான அரசாணையினை நிதித்துறையானது கடந்த 6.1.2023 அன்று அரசாணை நிலை எண் 7ல் வெளியிட்டது. இந்த அரசாணையில் தொன்றுதொட்டு பின்பற்றப்படும் மரபான, ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிக்கையினை பார்வையில் குறிப்பிடும் முறையை குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை பதிவு செய்கிறது.

புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று வழங்கப்பட்ட இரண்டு முறை அகவிலைப்படி உயர்வின் போது (14 மற்றும் 3 விழுக்காடு) வெளியிட்டப்பட்ட அரசாணைகளில், இது நாள் வரை பின்பற்றப்பட்ட மரபுகளின் அடிப்படையில், ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்வு குறிப்பாணைகளை பார்வையில் படிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த நிலையானது முற்றிலும் புதிய ஒரு நிலைப்பாடாக உள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுகள் அனைத்துமே, (தற்போது வழங்கப்பட்டுள்ள 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து) ஆறு மாத கால நிலுவைத் தொகையினை மறுத்ததோடு மட்டுமல்லாமல், ஆறு மாத காலம் காலங்கடத்தி வழங்கப்பட்டு வரும் அவல நிலைக்கு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தள்ளப்பட்டுள்ளோம். இதிலும் இப்போதைய நடைமுறை என்பது மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தாலும், அவ்வறிவிப்பிற்கு மாறாக அரசாணை வெளியிடப்படும் நிகழ்வு என்பது ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படியினை வரலாற்றிலேயே முதன்முறையாக மறுக்கும் நடைமுறையாகும். இந்நிகழ்வு, ஏதோ எதேச்சையாக நடந்ததாக பார்க்க முடியவில்லை. இது திட்டமிட்டு நடந்ததாகவே பார்க்க வேண்டி உள்ளது. இதன்மூலம் தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சொல்ல விழைவதெல்லாம். இனிமேல் ஒன்றிய அரசின் அகவிலைப்படி உயர்விற்கு ஏற்றாற்போல், தமிழக அரசு அகவிலைப்படியினை கண்டிப்பாக உயர்த்தாது என்ற அதிர்ச்சி செய்தியினைத்தான்.

இதனை ஒருபோதும், தமிழகத்திலுள்ள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆறு மாத கால நிலுவைத் தொகையினையும் நிறுத்துவிட்டு, தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் ஊழியர் விரோத போக்கினைத்தான் எங்களுக்கு உணர்த்துகிறது. அரசின் பல்வேறு துறைகளில், ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை செயலாக்குவதிலும் அதில் மாநில அரசு பதக்கங்களைப் பெறுவதிலும் தோளோடு தோள் நிற்கும் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் வஞ்சிக்கும் செயலானது மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே, நிதித்துறையால் வெளியிடப்பட்ட இந்த அரசாணை விஷயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, அரசிற்கும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களுக்குமான நல்லுறவினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.