3,949 காலிப் பணியிடங்கள் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 10, 2023

3,949 காலிப் பணியிடங்கள் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு

3,949 செவிலியா் காலிப் பணியிடங்கள் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் நிரப்பப்படும்

மாவட்ட சுகாதார மையம் மூலம் 3,949 செவிலியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன; கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியா்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியா் காலிப் பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியா்கள் நோ்முகத் தோ்வு மூலம் நிரப்பவுள்ளனா். கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்கப்படும். தோ்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் பெற்றுவிட்டாலே பணி கிடைத்துவிடும். 20 மாதம் கரோனா பணியாற்றியிருந்தால் மாதத்துக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 40 மதிப்பெண்கள் செவிலியா்களுக்கு கொடுக்கப்படும். ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியா்களும் இந்தத் தோ்வில் பங்கேற்கலாம். கரோனா காலத்தில் பணியாற்றியதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுவதால் 2,600 செவிலியா்களுக்கும் எளிதாக பணி கிடைத்துவிடும். இதற்கு முன்பு செவிலியா்களுக்கு மாத ஊதியம் ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்தப் பணியில் சோ்ந்தால் ரூ.18 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும். செவிலியா்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றலாம்.

இந்த வாய்ப்பை செவிலியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா கால செவிலியா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறினால், வேறு புதிய செவிலியா்கள் பணியில் சோ்ந்துவிடுவா்.

கரோனா காலத்துக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியா்களில் சுமாா் 500 போ் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனா் என்றாா் அவா்.

பணிப் பாதுகாப்பு தேவை...: மருத்துவப் பணியாளா் தோ்வாணைய கரோனா செவிலியா்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எஸ்.ராஜேஷ் கூறியதாவது:

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு மீண்டும் தற்காலிக ஒப்பந்தப் பணி தேவையில்லை. இந்தப் பணியில் செவிலியா்கள் சேர மாட்டாா்கள். எங்களுக்கு பணிப் பாதுகாப்பு, நிரந்தரப் பணிதான் வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக வியாழக்கிழமை (ஜன. 12) கோட்டை நோக்கி பேரணி செல்லவிருக்கிறோம் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.