புதிய கல்விக் கொள்கை தேவை: தலைமை நீதிபதி ரமணா பேச்சு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 21, 2022

புதிய கல்விக் கொள்கை தேவை: தலைமை நீதிபதி ரமணா பேச்சு

''கல்வி அளிக்கும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளாக பெருகியுள்ளதால், படித்து பெறும் பட்டம் மற்றும் மனித வளத்துக்கான மதிப்பு குறைந்துவிட்டது. வாழ்க்கையின் சவால்களை சந்திக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார்.

ஆந்திராவின் அமராவதியில் அமைந்துள்ள ஆச்சாரியா நாகார்ஜூனா பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்தப் பல்கலையின் முன்னாள் மாணவரான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஎன்.வி.ரமணாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் இடையே அவர் பேசியதாவது:நம் நாட்டில் கல்வித் தொழிற்சாலைகள் அதிகளவில் புற்றீசல் போல் பெருகியுள்ளன. எதிர்காலத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது. தொழில்முறை கல்வியில்கூட, வகுப்பறை பாடங்கள் மட்டுமே கற்றுத் தரப்படுகின்றன.

நல்ல பணிவான தொழிலாளர்கள் தேவை என்ற காலனியாதிக்க கொள்கையே தற்போதைய கல்வி முறையில் உள்ளது. இதில் இருந்து வெளியேற வேண்டும். இந்த நிலைக்கு யாரை, எதை குறை சொல்வது என்பது தெரியவில்லை.கல்வி நிறுவனங்கள், எதிர்கால ஊழியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன. இதனால், படித்து பெறும் பட்டம் மற்றும் மனித வளத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.நிஜ வாழ்க்கையில், எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குவதாக கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும்.

இதற்கேற்ற வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.படித்து வெளியேறும் மாணவர்கள், நாட்டுக்காக தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். இந்த சமூகத்துக்கு உதவக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மோசமான சிந்தனைகளை ஏற்காதீர்கள்; அநியாயத்தை சகித்து கொள்ளாதீர்கள். மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு அளிக்கக் கூடியவர்களாக, சிறந்த ஜனநாயகவாதிகளாக மாணவர்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.