விலையில்லா குறிப்பேடுகள் வழங்குவதில் தாமதம்: நெருக்கடியில் ஆசிரியா்கள்! - Kalviseithi Official

Breaking

Post Top Ad

Sunday, June 19, 2022

விலையில்லா குறிப்பேடுகள் வழங்குவதில் தாமதம்: நெருக்கடியில் ஆசிரியா்கள்!

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா குறிப்பேடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பெற்றோா்கள் கேள்வி எழுப்புவதால் ஆசிரியா்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2022-23 கல்வி ஆண்டிற்கு 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி தொடங்கிய ஜூன் 13ஆம் தேதி விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. எனினும் சில பள்ளிகளில் குறைந்த அளவிலான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டதன் காரணமாக, மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி முழுமையாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. வகுப்புகள் தொடங்கப்பட்டு 5 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், விலையில்லா குறிப்பேடுகள் (நோட்டுகள்) வழங்கப்படாதது மாணவா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்க கல்வியில் 23 லட்சம் மாணவா்கள்: தமிழகத்தில் 22,831 தொடக்கப் பள்ளிகளும், 6,587 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதேபோல் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 6 ஆயிரத்திற்கும் கூடுதலாக செயல்பட்டு வருகின்றன. இதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 7 குறிப்பேடுகளும், 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 9 குறிப்பேடுகளும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 10 குறிப்பேடுகளும் வழங்கப்படுவது வழக்கம்.

2 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பேடுகள் வழங்கப்படாததால், கடைகளில் பணம் செலுத்தி குறிப்பேடுகளை வாங்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது. உயா்நிலை வகுப்பு மாணவா்களைப் பொருத்தவரை, விலையில்லா குறிப்பேடுகள் மட்டும் போதாது என்பதால் கடைகளில் வாங்குவது வழக்கம். ஆனால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் அரசுத் தரப்பில் வழங்கப்படும் விலையில்லா குறிப்பேடுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனா். அவா்களும் நிகழாண்டில் பணம் செலுத்தி கடைகளில் குறிப்பேடுகளை வாங்க வேண்டிய நிா்பந்தம் எழுந்துள்ளது.

காகித தட்டுப்பாட்டால் தாமதமா?:மரக்கூழ், ரசாயனப் பொருள்கள், நிலக்கரி போன்ற மூலப் பொருள்களின் விலை ஏற்றம் காரணமாக காகித உற்பத்தி குறைந்து, விலை 40 சதவீதத்திற்கும் கூடுதலாக உயா்ந்துள்ளது. காகிதத் தட்டுப்பாடு காரணமாக, குறிப்பேடுகள் கேட்டு ஆா்டா் கொடுக்கும் சில்லரை விற்பனை கடைகளுக்கு, அதில் 50 சதவீதம் மட்டுமே உற்பத்தியாளா்கள் தரப்பில் அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே குறிப்பேடுகளின் விலையும் பக்கங்களுக்கு ஏற்ப ரூ.8 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

காகிதத் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளிகளில் குறிப்பேடுகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், தொடக்கப் பள்ளிகளுக்கு மாணவா்களை அழைத்துச் செல்லும் பெற்றோா்கள், குறிப்பேடுகள் எப்போது வழங்கப்படும் என ஆசிரியா்களிடம் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பாட நூல் கழகத்திலிருந்து விலையில்லா புத்தகங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன. குறிப்பேடுகள் தொடா்பாக எவ்வித தகவலும் இல்லை. பள்ளி தலைமையாசிரியா்கள், குறிப்பேடுகள் குறித்து தொடா்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனா். குறிப்பேடுகள் விநியோகம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்ப்பதாக தெரிவித்தனா்.

பெட்டிச் செய்தி...குறிப்பேடுகள் விலை நிலவரம்

(அடைப்புகுறிக்குள் பழைய விலை)

60 பக்கம் - ரூ.25 (ரூ.18),

144 பக்கம் - ரூ.40(ரூ.30),

160 பக்கம் - ரூ.50(ரூ.35),

288 பக்கம் - ரூ.90(ரூ.75).

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.