மருத்துவ மாணவர்களின் கல்வி சான்றிதழ் திருப்பி வழங்க கல்லூரிகளுக்கு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 31, 2022

மருத்துவ மாணவர்களின் கல்வி சான்றிதழ் திருப்பி வழங்க கல்லூரிகளுக்கு உத்தரவு

'கல்விச் சான்றிதழ் ஒன்றும் சந்தைப் பொருள் அல்ல' எனக்கூறிய உயர் நீதிமன்றம், மருத்துவ மாணவர்களின் சான்றிதழை திருப்பித் தர, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மதுரை, துாத்துக்குடி, தேனி மருத்துவ கல்லுாரிகள் மற்றும் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை படிப்பு முடித்த டாக்டர்கள் 25 பேர், தாக்கல் செய்த மனு:

கடந்த ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்தோம். படிப்பில் சேரும்போது, இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு உத்தரவாதம் அளித்தோம்.அதன்படி, படித்து முடித்த உடன், கொரோனா சிகிச்சை பணியில் 10 மாதங்கள் ஈடுபடுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டோம்; புதிதாக எந்த பணியும் வழங்கப்படவில்லை.

அதனால், கல்வி சான்றிதழ்களை தரும்படி, கல்லுாரி நிர்வாகத்திடம் கோரினோம். இரண்டு ஆண்டுகள் முழுமையாக பணியாற்றவில்லை எனக்கூறி சான்றிதழ்களை வழங்கவில்லை. எங்களின் கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் இ.மனோகரன் வாதாடினார். அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் டி.ரவிச்சந்தர், ''படிப்பில் சேரும்போது அளித்த உத்தரவாதத்தை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரைப் போன்றவர்களுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கவில்லை என்றாலும், அவர்கள் சான்றிதழ்களை திரும்ப பெற்றுள்ளனர்.

கல்வி சான்றிதழ் ஒன்றும் சந்தைப் பொருள் அல்ல; மாணவர்களின் சான்றிதழ்களை நிர்வாகம் வைத்துக் கொள்ள முடியாது.

எனவே, சான்றிதழ்களை திருப்பி வழங்க, மருத்துவ கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.